தென்காசி அருகே, கடத்தப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பம்:ஏற்கனவே திருமணம் ஆனதாக இளம்பெண் வீடியோவில் பேச்சு-`யாரையும் தொந்தரவு செய்யவேண்டாம்' என வேண்டுகோள்


தென்காசி அருகே, கடத்தப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பம்:ஏற்கனவே திருமணம் ஆனதாக இளம்பெண் வீடியோவில் பேச்சு-`யாரையும் தொந்தரவு செய்யவேண்டாம் என வேண்டுகோள்
x
தினத்தந்தி 1 Feb 2023 6:45 PM GMT (Updated: 1 Feb 2023 6:46 PM GMT)

தென்காசி அருகே, இளம்பெண் காரில் கடத்தப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண் வெளியிட்டுள்ள வீடியோவில் தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டதாகவும், யாரையும் தொந்தரவு செய்ய வேண்டாம், எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

தென்காசி

தென்காசி அருகே, இளம்பெண் காரில் கடத்தப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண் வெளியிட்டுள்ள வீடியோவில் தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டதாகவும், யாரையும் தொந்தரவு செய்ய வேண்டாம், எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

காதல் திருமணம்

தென்காசி அருகே உள்ள கொட்டாகுளத்தை சேர்ந்த மாரியப்பன் மகன் வினித் (வயது 22).

இவரும், அதே பகுதியை சேர்ந்த குஜராத் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட நவீன் பட்டேல் என்பவரது மகள் குருத்திகா (22) என்பவரும் பள்ளிப்பருவத்தில் இருந்தே சுமார் 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் தங்களது வீட்டை விட்டு வெளியேறி கடந்த 27-12-2022 அன்று நாகர்கோவிலில் நோட்டரி பப்ளிக் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். குருத்திகா வினித்தின் வீட்டில் இருந்தார். இந்தநிலையில் கடந்த 25-ந்தேதி குற்றாலம் போலீஸ் நிலையத்துக்கு வினித், குருத்திகா உள்ளிட்டோர் வந்து விட்டு திரும்பினர்.

காரில் கடத்தல்

குத்துக்கல்வலசையில் ஒரு மர ஆலை அலுவலகத்தில் இருந்தபோது நவீன் பட்டேல் மற்றும் சிலர் அங்கு புகுந்து அவர்களை தாக்கி குருத்திகாவை காரில் கடத்தி சென்றனர். இந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவியது. இதைத்தொடர்ந்து நவீன் பட்டேல் மற்றும் 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இதில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

குருத்திகா மற்றும் பெற்றோர் கேரளா, கோவா, குஜராத் போன்ற இடங்களுக்கு மாறி மாறி சென்றனர். இதனை போலீசார் அவர்களது செல்போன் சிக்னல் மூலம் பார்த்து சென்றபோது வெவ்வேறு இடங்களுக்கு சென்றதால் அவர்கள் சிக்கவில்லை.

வீடியோ பேச்சு

இந்த நிலையில் இந்த வழக்கில் திடீர் திருப்பமாக நேற்று முன்தினம் இரவு குருத்திகா பேசிய வீடியோ ஒன்று வெளியானது. அதில் அவர் கூறியிருப்பதாவது:-

எனது பெயர் குருத்திகா பட்டேல். நான் நன்றாக இருக்கிறேன். பாதுகாப்பாக இருக்கிறேன். எனக்கு ஏற்கெனவே மைத்ரிக் பட்டேலுடன் திருமணம் ஆகிவிட்டது. நான், அவர் மற்றும் எனது பெற்றோருடன் நன்றாக பாதுகாப்பாக இருக்கிறேன். எனக்கு எந்த விதமான பிரஷரோ, டார்ச்சரோ கிடையாது.

இது சம்பந்தமாக அங்கு ஏதாவது பிரச்சினைகள் நடக்கிறது என்றால், அது வேண்டாம். யாரையும் தொந்தரவு செய்ய வேண்டாம். யாருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என்னோட இஷ்டப்படி தான் எல்லாமே நடந்துச்சு. இது சம்பந்தமாக யாரையும் எதுவும் செய்ய வேண்டாம்.

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

பிரிக்க சதி

அவரை கண்டுபிடிக்க முடியாத சூழ்நிலையில் இப்படி ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து வினித் கூறியதாவது:-

நானும் குருத்திகாவும் இந்து மத சட்டப்படி தாலி கட்டி, மாலை மாற்றி, குருத்திகாவிற்கு மெட்டி அணிவித்து திருமணம் செய்து கொண்டோம். ஒரு மாதம் எங்களது வீட்டில் எனது மனைவி மிகவும் சந்தோஷமாக எங்களது குடும்பத்தாருடன் இருந்தார். இதன் பிறகு எனது மனைவியை அவரது வீட்டார் கடத்திச் சென்றனர்.

இப்போது என் மனைவி பேசியவாறு வீடியோ வந்துள்ளது. ஏன் இதை இதற்கு முன்பாக அவர்கள் கூறவில்லை? அவருக்கு திருமணம் ஆன விவரம் இதுவரை கூறாமல் இப்போது கூறுவதை பார்க்கும்போது இது எங்களைப் பிரிக்க வேண்டும் என்று சதி நடப்பது போல் தெரிகிறது. நான் போலீசாரை கேட்டுக்கொள்வது எல்லாம் எனது மனைவியை மீட்டு மீண்டும் எனது குடும்பத்தாருடன் சேர்த்து வைக்க வேண்டும் என்பதுதான். யாருடைய மிரட்டலினாலோ இவ்வாறு அவர் பேசி உள்ளார் என்று தான் எனக்கு தெரிகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

திருமணச் சான்று

இந்த நிலையில் குருத்திகாவிற்கும் மசானி மைத்ரிக் பட்டேல் என்பவருக்கும், கடந்த 27-10-2022 அன்று அகமதாபாத்தில் திருமணம் நடைபெற்றதாக சான்றிதழ் ஒன்று தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு மெயில் மூலம் வந்துள்ளது.

இதுகுறித்து கேட்டபோது, இனி குருத்திகா மற்றும் அவரது தரப்பினர் நீதிமன்றத்தில் தான் பதில் கூற வேண்டும் என்று போலீஸ் வட்டாரத்தில் கூறப்பட்டது.

நீதிமன்ற உத்தரவு

இதற்கிடையே மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டிருந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு வந்தது.

இதனை விசாரித்த நீதிபதி வருகிற மார்ச் 1-ந் தேதி இதுகுறித்து தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, குற்றாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர், குருத்திகாவின் பெற்றோர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும், என்று உத்தரவிட்டார்.

----------------

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள்

3 பேர் ஆயுதப்படைக்கு மாற்றம்

இளம்பெண் கடத்தல் விவகாரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் குற்றாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

அவரை தொடர்ந்து தற்போது தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்களான மாதவன், செல்வகணபதி, விக்னேஷ் ஆகியோரும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த தகவலை போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



Next Story