பந்தல் அமைப்பாளரின் காதை கடித்த வாலிபர்; 7 பேர் மீது வழக்கு


பந்தல் அமைப்பாளரின் காதை கடித்த வாலிபர்; 7 பேர் மீது வழக்கு
x

மண்டையூரில் பந்தல் அமைப்பாளரின் காதை கடித்த வாலிபர் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

புதுக்கோட்டை

தகராறு

விராலிமலை ஒன்றியம், மண்டையூரில் பெரிய அய்யனார் கோவில் தேர் திருவிழா நடைபெற்றது. இதைமுன்னிட்டு அங்குள்ள பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு முன்பு பந்தல் போட்டு தங்கள் வீட்டிற்கு வரும் உறவினர்களுக்கு கறி விருந்து வைப்பது வழக்கம். அந்த வகையில் மண்டையூரை சேர்ந்த மாரியப்பன் வீட்டின் அருகே உள்ள ஒருவரது வீட்டிற்கு முன்பு ஆம்பூர்பட்டி நால்ரோட்டை சேர்ந்த முருகேசன் மகன் கிருஷ்ணமூர்த்தி (வயது 24), திருச்சி மாவட்டம், மணிகண்டம் அருகே உள்ள நாராயணபுரம் அழகன் மகன் முருகேசன் (29) ஆகிய இருவரும் நேற்று முன்தினம் மாலை பந்தல் போட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மாரியப்பன் மகன் துரைசெல்வம் எங்களது வீட்டை ஒட்டி ஏன் பந்தல் போடுகிறாய் என்று பந்தல் போட்டுக் கொண்டிருந்த முருகேசன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோரிடம் தகராறு செய்துள்ளனர்.

காதை கடித்த வாலிபர்

அப்போது துரைசெல்வம், ராஜ்குமார், கார்த்திக், லோகநாதன் மற்றும் சிலருடன் சேர்ந்து கொண்டு கிருஷ்ணமூர்த்தி, முருகேசன் ஆகிய இருவரையும் பலமாக தாக்கியுள்ளனர். மேலும் அதில் ஒரு வாலிபர் பந்தல் போடும் நபரான முருகேசனின் காதை கடித்து காயப்படுத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த முருகேசனை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் மண்டையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் வழக்குப்பதிவு செய்து பந்தல் அமைப்பாளர்களை தாக்கிய துரைசெல்வம் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story