மளிகை கடையில் திருடிய வாலிபருக்கு பொதுமக்கள் தர்ம அடி
கண்டாச்சிபுரம் அருகே மளிகை கடையில் திருடிய வாலிபருக்கு பொதுமக்கள் தர்ம அடி
திருக்கோவிலூர்
கண்டாச்சிபுரம் போலீஸ் சரகத்துக்குட்பட்ட தும்பரமேடு கிராமத்தில் மளிகை கடை நடத்தி வருபவர் முருகன். இவர் நேற்று கடையில் இருந்தபோது அங்குவந்த வாலிபர் ஒருவர் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டார். உடனே முருகன் தண்ணீர் எடுத்து வருவதற்காக கடையை ஒட்டி உள்ள வீட்டுக்குள் சென்றார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட அந்த வாலிபர் மளிகை கடையில் இருந்த கல்லாப்பெட்டியை திறந்து அதில் இருந்த ரூ.5 ஆயிரத்தை திருடினார். அப்போது தண்ணீர் எடுத்து வந்த முருகன் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். இதையடுத்து அங்கிருந்து தப்பி செல்ல முயன்ற வாலிபரை அங்கு நின்ற பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து கண்டாச்சிபுரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர் ஒடுவன்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வேலாயுதம் மகன் பாவாடை(வயது 35) என்பதும், மளிகை கடையில் பணத்தை திருடியதும், இவர் மீது விழுப்புரம் மேற்கு மற்றும் காணை போலீஸ் நிலையங்களில் பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து கண்டாச்சிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா, சப்-இன்ஸ்பெக்டர் மருதப்பன் ஆகியோர் பாவாடையை கைது செய்து அவரிடம் இருந்து ரூ.5 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனர்.