தொழிலாளியை மிரட்டிய வாலிபர் கைது
கழுகுமலையில் தொழிலாளியை மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கழுகுமலை:
கழுகுமலை குதிரைலாய தெருவை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 54). கட்டிட தொழிலாளி. இவருக்கும், கழுகுமலை வட்டத்தெரு பகுதியை சேர்ந்த காளிராஜ் மகன் இசக்கிமாரி (28) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. மேலும் மகேந்திரனின் அக்காள் மகளை, இசக்கிமாரி கடந்த மாதம் கத்தியால் குத்தியது தொடர்பான வழக்கு நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அங்குள்ள தேவர் சிலை அருகே மகேந்திரன் தனது நண்பருடன் பேசிக்கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு வந்த இசக்கிமாரி, "உனது அக்காள் மகள் என் மீது கொடுத்துள்ள புகாரை வாபஸ் வாங்க வேண்டும். அவர் தூண்டியதின் பேரில் தான் என் மீது கழுகுமலை போலீஸ் நிலையத்தில் 2 வழக்குகள் போடப்பட்டுள்ளது. எனவே புகாரை வாபஸ் வாங்க செய்ய வேண்டும்" எனக்கூறி மகேந்திரனிடம் தகராறில் ஈடுபட்டார். அதற்கு மகேந்திரன் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இசக்கிமாரி, தனது இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காட்டி கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து மகேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் கழுகுமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன் வழக்குப்பதிவு செய்து இசக்கிமாரியை கைது செய்தார்.