திருந்தி விட்டார்களா பிக்பாக்கெட் திருடர்கள்... நூதன முறையில் அதிகரிக்கும் திருட்டு


திருந்தி விட்டார்களா  பிக்பாக்கெட்        திருடர்கள்... நூதன முறையில் அதிகரிக்கும் திருட்டு
x

திருந்தி விட்டார்களா பிக்பாக்கெட் திருடர்கள்... நூதன முறையில் அதிகரிக்கும் திருட்டு

உழைக்காமல் உடல் வளர்க்க நினைக்கும் சோம்பேறிகள் பணம் சேர்க்க தேர்ந்தெடுக்கும் வழிகளில் முக்கியமானதாக திருட்டு உள்ளது. சமீப காலங்களில் திருட்டு சம்பவங்கள் குறையவில்லை என்றாலும் ஆரம்ப காலங்களில் அதிக அளவில் காணப்பட்ட பிக்பாக்கெட் சம்பவங்கள் குறைந்து விட்டன என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு இடத்தில் திருட்டு நடந்தால் அது நடந்திருக்கும் முறையை வைத்தே திருட்டில் ஈடுபட்ட முன்னாள் குற்றவாளிகளை போலீசார் நெருங்கி விடுவார்கள்.

அதாவது ஆளில்லாத நேரத்தில் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து திருடுபவர்கள், ஓட்டைப்பிரித்து உள்ளே நுழைந்து திருடுபவர்கள், கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறி செய்பவர்கள், மோட்டார்சைக்கிள் திருடுபவர்கள், கார் கண்ணாடியை உடைத்து திருடுபவர்கள் என ஒவ்வொரு வகையான திருடர்களையும் போலீசார் வகைப்படுத்தி விடுவார்கள். ஏனென்றால் ஒவ்வொரு திருடனும் தனக்குரிய ஸ்டைலிலேயே திருடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்களில் பிக்பாக்கெட் திருடர்கள் எனப்படும் ஜேப்படி திருடர்கள், கூட்டமாக இருக்கும் இடங்களில் புகுந்து அடுத்தவர் பாக்கெட்டிலுள்ள பணத்தைத் திருடுவார்கள். இதற்கென இவர்கள் பல்வேறு வழிமுறைகளைப் பின்பற்றுவார்கள். கூட்டத்தில் நெருக்கமாக நின்று கொண்டு நமது கவனத்தை திசை திருப்பி, சட்டை பாக்கெட்டினுள் 2 விரல்களை லாவகமாக செலுத்தி பணத்தைத் திருடுவது ஒரு ரகம். உதட்டுக்கும் பல்லுக்கும் இடையில் சிறிய துண்டு பிளேடை வைத்துக்கொண்டு சந்தர்ப்பம் கிடைக்கும் போது அதை எடுத்து பேண்ட் அல்லது டவுசரில் லேசாக கிழித்து பணத்தை அபேஸ் செய்வது ஒரு ரகம். ஓடும் பஸ்ஸிலிருந்து தொடையில் ரத்தம் வழிய 'ஐயோ பொண்ணு கல்யாணத்துக்கு நகை வாங்க கொண்டு வந்த பணத்தை பிளேடு போட்டு எடுத்துட்டாங்களே'என்று கதறியபடி இறங்குபவர்களை முன்பெல்லாம் பல பஸ் நிலையங்களில் பார்க்க முடியும்.

இவ்வாறு பிக்பாக்கெட் அடித்த திருடனை மற்றவர்களுக்கு அடையாளம் தெரிந்தாலும் காட்டிக் கொடுக்க யாரும் முன்வருவதில்லை. ஏனென்றால் வாயில் துண்டு பிளேடை போட்டு மென்று முகத்தில் துப்பி விடுவார்கள் என்ற பயம் எல்லோருக்கும் உண்டு. அதையும் தாண்டி அடையாளம் காட்டப்பட்டு தர்ம அடி வாங்கும் திருடர்கள் மறுநாளே எதுவும் நடக்காதது போல மீண்டும் கைவரிசை காட்ட கிளம்பி விடுவார்கள் என்பது ஆச்சரியப்பட வைக்கும். ஓடும் பஸ்சுக்குள் ஒரு பிக்பாக்கெட் திருடன் ஏறிவிட்டால் கண்டக்டர் நாசூக்காக பொதுமக்களை எச்சரிப்பார். 'கூட்டம் அதிகமாக இருக்குது. யாரும் படிக்கட்டு பக்கம் நிக்காதீங்க. கூட்டம் அதிகமா இருக்குது. பத்திரமா நடு வண்டிக்கு வாங்க'என்று குரல் கொடுக்கும் கண்டக்டரின் குரலில் 'கூட்டம் ஜாஸ்தியா இருக்கு' என்பது அழுத்தமாக இருக்கும். மேலும் 'கூட்டமா இருக்கு, பணத்தை பத்திரமா பாக்கெட்டிலேயே வச்சிட்டிருக்காதீங்க. எடுத்து கையிலே வெச்சுக்கோங்க' என்று பாக்கெட் என்பதில் அழுத்தம் கொடுத்து கூறுவார். அத்தனை எச்சரிக்கையையும் தாண்டி ஏமாந்தவர்கள் பாக்கெட்டை பதம் பார்க்கும் கலை தெரிந்தவர்கள் பிக்பாக்கெட் திருடர்கள்.

ஆனால் சமீப காலங்களாக பிக்பாக்கெட் திருடர்களின் நடமாட்டம் குறைந்துள்ளது. ஆனாலும் கிராமத்துப் பெண்களின் கட்டைப் பை, நகரத்துப் பெண்களின் கைப்பை போன்றவற்றைக் குறி வைத்து பர்ஸ், செல்போனை திருடிச் செல்லும் கும்பல் இன்னும் கைவரிசை காட்டிக்கொண்டு தான் உள்ளது. விரல் வித்தை காட்டும் பிக்பாக்கெட் திருடர்கள் ஓய்வு பெற்று விட்டார்களா என்ற கேள்விக்கு பெயர் வெளியிட விரும்பாத முன்னாள் பிக்பாக்கெட் திருடன் கூறியதாவது:-

'பிக்பாக்கெட் என்பது எல்லோரும் எளிதாக கற்றுக் கொள்ளக் கூடிய விஷயம் இல்லை. அதற்கு நிறைய முயற்சியும் பயிற்சியும் தேவையாக இருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக நம்மால் வெற்றிகரமாக இந்த திருட்டை செய்ய முடியும் என்ற நம்பிக்கையும், மாட்டிக் கொண்டால் சமாளிக்க முடியும் என்ற தைரியமும் கண்டிப்பாக தேவைப்படும். அத்துடன் அருகில் இருப்பவர்களின் உடல் மொழியை உள்வாங்கி நம்முடைய செயலுக்கு அவர்களிடமிருந்து என்னவிதமான எதிர்வினை இருக்கும் என்பதை கணிக்க வேண்டியது அவசியமாகும். ஒரு மேஜிக் செய்பவர் மற்றவர் கண்களில் சிக்காமல் வித்தை காட்டுவதற்கு எவ்வளவு பயிற்சிகள் செய்கிறாரோ அதே அளவுக்கு பிக்பாக்கெட் அடிப்பவர்களுக்கும் தேவைப்படுகிறது. மேலும் மாட்டிக் கொள்ளாமல் தப்பி ஓடுவதற்கும், மாட்டிக் கொண்டால் அடி வாங்குவதற்கும் உடல் வலு தேவைப்படும்.சில வேளைகளில் மயங்கியது போல நடித்து அடியிலிருந்து தப்பிக் கொள்ள வேண்டும் இல்லாவிட்டால் உயிருக்கே ஆபத்தாகும் அளவுக்கு அடி விழக்கூடும்.

இன்றைய நிலையில் மூளையைப் பயன்படுத்தி நூதனமாக திருடுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து உடல் வலுவைப் பயன்படுத்தி திருடுபவர்கள் குறைந்து விட்டார்கள். பிக்பாக்கெட் திருடர்கள் பலரும் போதைக்கு அடிமையாகி விட்டதால் விரல் நடுக்கம் எடுத்து பிக்பாக்கெட் அடிப்பதில் தடுமாற்றம் ஏற்படுகிறது. இதனாலேயே பலரும் தொழிலை விட்டு விட்டனர்.இன்னும் தொழிலை விட்டு விலக விரும்பாத ஒரு சிலர் போதையில் விழுந்து கிடப்பவர்களை இலக்காக்கி பணத்தைத் திருடுகின்றனர்'என்றார்.

மேலும் இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

எஸ்.அந்தோணிராஜ், சுவீட் கடை உரிமையாளர், உடுமலை

உடுமலை பஸ் நிலையத்தில் 17 ஆண்டுகளுக்கு மேலாக கடை வைத்துள்ளோம். ஆரம்ப காலங்களில் பஸ்களில் பிக்பாக்கெட் சம்பவங்கள் அதிக அளவில் நடைபெறும்.ஆனால் தற்போது அவ்வாறு நடைபெறுவதில்லை.இதற்கு பல்வேறு பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தியிருப்பதும் போலீசார் ரோந்துப் பணியை அதிகப்படுத்தியிருப்பதும் காரணமாகும். மேலும் கொரோனாவுக்குப் பிறகு இருசக்கர வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து விட்டது. இதனால் பஸ் நிலையங்களில் கூட்ட நெருக்கடி மிகவும் குறைந்து விட்டதும் பிக்பாக்கெட் குறைந்ததற்குக் காரணமாக இருக்கலாம்.

ஆனால் அடித்தட்டு திருடர்கள் குறைந்துள்ளார்களே தவிர அட்வான்ஸ் திருடர்கள் குறையவில்லை என்று சொல்லலாம். அன்றாட வயிற்றுப் பிழைப்புக்கு திருடிய பிக்பாக்கெட் திருடர்களை விட ஆடம்பர வாழ்வுக்காக நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி திருடும் திருடர்கள் ஆபத்தானவர்கள்.

என்.பட்டுராஜா, மளிகைக்கடை உரிமையாளர், உடுமலை

முன்பெல்லாம் அரிப்பை உண்டாக்கக் கூடிய ஒருவகை இலையை பொடி செய்து அருகிலிருப்பவர்கள் மேல் தூவி விடுவார்கள் அல்லது பொட்டுக் கடலையை மென்று சட்டையில் துப்புவார்கள். இதனால் அவர்கள் கவனம் திசை மாறும் போது பணத்தைத்திருடி விடுவார்கள். இதுபோல பல முறைகளில் திருடுவார்கள். இப்போது ஏ.டி.எம்.கார்டுகள், பணப் பரிமாற்ற ஆப்கள் வந்த பிறகு பாக்கெட்டில் யாரும் அதிக அளவில் பணத்தை வைத்துக் கொள்வதில்லை. இன்றைய நிலையில் ரூ.1-க்கு தேங்காய் எண்ணெய் பாக்கெட் வாங்கி விட்டு 'அண்ணாச்சி சில்லறை இல்லை, கூகுள் பே இருக்கா' என்று கேட்கும் நிலையே உள்ளது. ஆன்லைன் பணப் பரிவர்த்தனை பிக்பாக்கெட் திருடர்களுக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளது என்றாலும் ஆன்லைன் திருடர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது ஆபத்தானது. மேலும் தற்போது போதைப் பொருட்கள் பயன்பாடு, செல்போன் திருட்டு அதிகரித்துள்ளது.

எஸ்.நாகராஜன், உடுமலை

பிக்பாக்கெட் குறைந்ததற்கு பஸ் நிலையங்களில் மட்டுமல்லாமல் பல பஸ்களிலும், பொது வெளிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பது முக்கிய காரணமாகும். மேலும் வீடு புகுந்து திருடுவது முதல், ஆன்லைன் திருட்டு வரை போலீசாரிடம் சிக்கினால் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்து விடுவார்கள். ஆனால் பிக்பாக்கெட் திருட்டில் அடி வாங்கும் ரிஸ்க் அதிகம் என்பதால் பிக்பாக்கெட் திருடர்கள் திருட்டை கைவிட்டு விட்டனர்'என்று அவர்கள் கூறினர்.

'திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது' என்பது எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய பாடலாக இருக்கிறது. பிக்பாக்கெட் திருடர்கள் திருந்தி விட்டார்களா அல்லது திசைமாறி 'பிக் பாக்கெட் டூ பிக் டார்கெட்' என்ற நிலைக்கு மாறி விட்டார்களா என்று எண்ணுமளவுக்கு திருட்டு சம்பவங்கள் தடையில்லாமல் நடந்து கொண்டுதான் உள்ளது. எனவே போலீசார் தங்கள் பிடியை இறுக்கினால் மட்டுமே இதற்குத் தீர்வு காண முடியும்.


Related Tags :
Next Story