தை அமாவாசையையொட்டி ராமநாதசுவாமி கோவிலில் தீர்த்தவாரி


தை அமாவாசையையொட்டி ராமநாதசுவாமி கோவிலில் தீர்த்தவாரி நடைபெற்றது. இதையடுத்து, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து பொதுமக்கள் வழிபட்டனர்.

புதுக்கோட்டை

தை அமாவாசை

மறைந்த முன்னோர்களுக்கு அமாவாசை தினத்தில் திதி கொடுக்கப்படுவது உண்டு. இதில் தமிழ் மாதங்களில் தை, ஆடி அமாவாசை தினத்திலும், புரட்டாசி மாத மகாளய அமாவாசை தினத்திலும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். அன்றைய தினங்களில் மறைந்த முன்னோர்களை நினைத்து திதி கொடுத்து வழிபாடு நடத்துவது ஐதீகமாக உள்ளது.

அந்த வகையில் தை அமாவாசையையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று நீர்நிலைகளில் பக்தர்கள் புனித நீராடி, மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். புதுக்கோட்டையில் சாந்தநாத சாமி கோவில் அருகே உள்ள பல்லவன் குளக்கரையில் இதற்காக பிரத்யேக இடத்தில் தர்ப்பணம் கொடுக்க பொதுமக்கள் ஏராளமானோர் வந்தனர்.

அகத்திக்கீரை

புரோகிதர்களும் ஒரே நேரத்தில் 10 முதல் 15 பேர் வரை அமர வைத்து அவர்களது முன்னோர்கள் பெயர், நட்சத்திரம் கூறி வேத மந்திரங்களை ஓதி பூஜை செய்தனர். தொடர்ந்து அரிசி மாவில் செய்யப்பட்ட பிண்டத்தினை குளத்தில் பொதுமக்கள் கரைத்து வழிபட்டனர். மேலும் அருகே உள்ள கோவில்களுக்கும் சென்று வழிபாடு நடத்தினர்.

இதையொட்டி புதுக்கோட்டையில் பல்லவன் குளக்கரையில் நேற்று பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பூஜைக்கான பொருட்கள் விற்பனை கடைகளும் ஆங்காங்கே சாலையோரம் அமைத்து வியாபாரிகள் வியாபாரம் செய்தனர். அகத்திக்கீரையை வாங்கி பசு மாட்டிற்கு தீவனமாக கொடுத்தனர்.

ராமநாதசுவாமி கோவில்

மணமேல்குடி அருகே கட்டுமாவடி கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க உகந்த இடமாக கருதப்படுகிறது. இங்கு கடற்கரையையொட்டி ராமநாதசுவாமி கோவில் உள்ளது. ராவணனிடமிருந்து சீதையை மீட்க சென்ற ராமர் இந்த வழியாக ராமேசுவரம் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அனுமன் ராமருக்கு பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.

இங்கு ராமர் சிலை சுயம்பு வடிவில் உள்ளது. சீதை சமேதராக ராமர், லெட்சுமணர், ஆஞ்சநேயர், சோமஸ்கந்தர், விநாயகர் என பஞ்சமூர்த்திகள் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். இங்கு தை மற்றும் ஆடி அமாவாசை நாட்களில் பஞ்சமூர்த்திகள் கடலுக்குள் சென்று புனித நீராடுவது (தீர்த்தவாரி) வழக்கம். சுவாமிகள் தீர்த்தவாரி முடிந்ததும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலுக்குள் இறங்கி புனித நீராடிய பின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

தீர்த்தவாரி

தை அமாவாசையையொட்டி ராமநாதசுவாமி கோவிலில் தீர்த்தவாரி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து சாமி ஊர்வலமும் நடைபெற்றது. தீர்த்தவாரியை முன்னிட்டு கோவில் அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து சுவாமிகளுக்கு அலங்காரம் செய்து அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் என ஆயிரக்கணக்கானோர் குடும்பத்துடன் கடலில் இறங்கி புனித நீராடினர். பின்னர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து முன்னோர்களை நினைவு கூர்ந்து வழிபட்டனர்.

இதேபோன்று மணமேல்குடி கோடியக்கரையிலும் தீர்த்தவாரி நடைபெற்றது. கோடியக்கரையை பொறுத்தமட்டில் கிழக்கு, தெற்கு, வடக்கு ஆகிய 3 திசைகளில் கடல் சூழ்ந்தும், மேற்கு திசையில் மாங்க்ரோவ் தாவரங்கள் மற்றும் வானளாவிய மரங்கள் நிறைந்த வனப்பகுதியாகவும் உள்ளன. கடல் 'ப' வடிவில் உள்ளதால் அலைகள் அடிப்பதில்லை. கடலுக்குள் நீண்டதூரம் சென்று புனித நீராட வசதியாக உள்ளது.

விநாயகருக்கு அபிஷேகம்

கடலுக்குள் மூலஸ்தான கோபுரத்துடன் கூடிய விநாயகர் கோவில் உள்ளது. கோடியக்கரைக்கு தர்ப்பணம் செய்ய வருபவர்கள் கடலுக்குள் நடந்து சென்று விநாயகரை வழிபட்டு செல்வது வழக்கம். இதற்காக கோவிலில் அதிகாலை முதலே திரளான பொதுமக்கள் குவிந்தனர். தொடர்ந்து விநாயகருக்கு அபிஷேகம், ஆராதனைகளும் நடைபெற்றது. பின்னர் முன்னோர்களை நினைவுகூர்ந்து பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்து, சுவாமியை வழிபட்டனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

இதுபோன்று மீமிசல் கடற்கரையை ஒட்டியுள்ள கல்யாணராமர் சுவாமி கோவில், ஆர்.புதுப்பட்டிணம் கடற்கரையை ஒட்டியுள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில், முத்துகுடா கடற்கரையை ஒட்டியுள்ள தீர்த்தாண்டதானம் சர்வ தீர்த்தேஸ்வரர் கோவில்களிலும் தை அமாவாசையையொட்டி தீர்த்தவாரி நடந்தது.

திருவரங்குளம்

திருவரங்குளம் அருகே உள்ள காசிக்கு வீசம் கூட என்று அழைக்கப்படும் திருவுடையார்பட்டி திருமூலநாதர் திரிபுரசுந்தரி அம்பாள் கோவில் வெள்ளாற்றங்கரையில் வடபுறம் அமைந்துள்ளது. இந்த ஆற்றங்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதேபோல் திருவரங்குளம் திருக்குளக்கரையிலும் தை அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கப்பட்டது.


Next Story