சேலம் அருகே வணிக வளாகத்தில் 2 கடைகளில் பணம் திருட்டு


சேலம் அருகே வணிக வளாகத்தில் 2 கடைகளில் பணம் திருட்டு
x

சேலம் அருகே வணிக வளாகத்தில் அடுத்தடுத்து 2 கடைகளில் பணம் திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சேலம்

சேலம்:

வணிக வளாகம்

சேலம் அருகே உள்ள மாசிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராமன். இவர் அங்கு உள்ள ஒரு வணிக வளாகத்தில் பேக்கரி கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வியாபாரத்தை முடித்துக்கொண்டு வீட்டிற்கு சென்றார். நேற்று காலை கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது குறித்து அந்த வழியாக சென்ற சிலர் ராமனுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவர் வந்த கடைக்குள் சென்று பார்த்தார். அப்போது கடையில் வைக்கப்பட்டு இருந்த ரூ.20 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது.

ஜவுளிக்கடை

இதே போன்று மேட்டுப்பட்டி அருகே உள்ள தாதனூரை சேர்ந்தவர் வில்சன். இவர் அதே வணிக வளாகத்தில் ஜவுளிக்கடை வைத்து நடத்தி வருகிறார். அந்த கடையின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த ரூ.10 ஆயிரம் திருடப்பட்டு இருந்தது. அயோத்தியாப்பட்டணத்தை சேர்ந்தவர் மதன். அந்த வணிக வளாகத்தில் பல்பொருள் அங்காடி வைத்து நடத்தி வருகிறார். இந்த கடையின் பூட்டை மர்ம நபர்கள் உடைக்க முயன்றனர். ஆனால் பூட்டை உடைக்கமுடியவில்லை. இதனால் கடையில் இருந்த பணம், பொருட்கள் தப்பின. இது குறித்து கடை உரிமையாளர்கள் 3 பேரும் அம்மாபேட்டை போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒரே வணிக வளாகத்தில் உள்ள கடைகளில் பணம் திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.

கோவிலில் திருட முயற்சி

இதனிடையே மாசிநாயக்கப்பட்டியை அடுத்த உடையாப்பட்டி கருமாரியம்மன் கோவிலில் 2 பேர் திருட முயன்றுள்ளனர். எனவே கோவிலில் திருட முயன்ற கும்பலுக்கும், கடைகளில் திருடிய கும்பலுக்கும் தொடர்பு இருக்குமோ? அல்லது 2 இடங்களில் கைவரிசை காட்டியது ஒரே நபர்களா? எனவும் அம்மாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story