அரிசி ஆலை உரிமையாளர் வீட்டில் 20 பவுன் நகை திருட்டு
காங்கயத்தில் அரிசி ஆலை உரிமையாளரின் வீட்டில் 20 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
காங்கயத்தில் அரிசி ஆலை உரிமையாளரின் வீட்டில் 20 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
நகை, பணம் திருட்டு
காங்கயம் அய்யாசாமி நகர் காலனி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் காங்கயம் அருகே மிதிப்பாறை பகுதியில் அரிசி ஆலை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் கிருஷ்ணமூர்த்தி நேற்று காலை 10 மணியளவில் குடும்பத்துடன் திருப்பூரில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றார். பின்னர் மதியம் 2 மணிக்கு வீட்டுக்குத் திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் 2 கதவுகளும் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோவும் உடைக்கப்பட்டு, அதில் வைக்கப்பட்டிருந்த 20 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் திருட்டு போனது தெரிய வந்தது. இது குறித்து காங்கயம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் வந்து ஆய்வு மேற்கொண்டனர்.
கண்காணிப்பு கேமரா பதிவு ஆய்வு
மேலும் திருட்டு போன வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தீவிரமாகத் தேடி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.