கவுந்தப்பாடியில் துணிகரம்: மளிகை கடை பூட்டை உடைத்து ரூ.1¼லட்சம் கொள்ளை- மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
கவுந்தப்பாடியில் மளிகை கடையின் பூட்டை உடைத்து ரூ.1¼லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
கவுந்தப்பாடி
கவுந்தப்பாடியில் மளிகை கடையின் பூட்டை உடைத்து ரூ.1¼லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
கடை திறந்து கிடந்தது
கவுந்தப்பாடி சத்தி மெயின்ரோட்டில் வசித்து வருபவர் சையது முகமது புகாரி (வயது 41). இவர் கடந்த 7 ஆண்டுகளாக கவுந்தப்பாடி நால் ரோட்டில் மளிகைகடை வைத்து நடத்தி வருகிறார். சையது முகமது புகாரி நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் வியாபாரத்தை முடித்துவிட்டு கடையின் ஷட்டரை பூட்டி விட்டு அதே பகுதியில் உள்ள வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 3.45 மணி அளவில் அங்குள்ள மசூதிக்கு வந்த சிலர் கடை திறந்து கிடப்பதை பார்த்தனர். உடனே இதுபற்றி சையது முகமது புகாரியிடம் கூறினர்.
ரூ.1¼லட்சத்தை காணவில்லை
அதைத்தொடர்ந்து அவர் அங்கு விரைந்து வந்தார். உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பண பெட்டியில் வைத்திருந்த ரூ.1லட்சத்து 20 ஆயிரத்தை காணவில்ைல. இதுகுறித்து அவர் கவுந்தப்பாடி போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுபாஸ், சப்-இன்ஸ்பெக்டர் சின்னராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். இரவு 10 மணி அளவில் கடையை பூட்டிவிட்டு சென்றதை மர்மநபர்கள் நோட்டமிட்டுள்ளனர்.
கொள்ளை
பின்னர் அங்கு சென்று கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். அதன்பின்னர் அங்கு பண பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரூ.1லட்சத்து 20 ஆயிரத்தை கொள்ளையடித்துவிட்டு் தப்பித்து சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். எப்போதும் ஆட்கள் நடமாட்டம் காணப்படும் கவுந்தப்பாடி நால்ரோட்டில் மளிகை கடை ஷட்டரை உடைத்து பணத்தை திருடி சென்ற சம்பவம் வியாபாரிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது