ஓடும் ரெயிலில் பெண் பயணியிடம் கத்திமுனையில் நகை பறிக்க முயற்சி
திருமங்கலம் அருகே ஓடும் ரெயிலில் பகல் நேரத்தில் பெண் பயணியிடம் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் கத்திமுனையில் நகை பறிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
திருமங்கலம்,
திருமங்கலம் அருகே ஓடும் ரெயிலில் பகல் நேரத்தில் பெண் பயணியிடம் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் கத்திமுனையில் நகை பறிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நகை பறிக்க முயற்சி
திருச்சியில் இருந்து மதுரை வழியாக கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு தினசரி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் இரு மார்க்கங்களிலும் இயக்கப்படுகிறது. இதற்கிடையே, நெல்லையை சேர்ந்த சுந்தரம், அவரது மனைவி லட்சுமி (வயது 50). இவர்களது மகன் திருச்சியில் வசித்து வருகிறார். அவரை பார்ப்பதற்காக தம்பதியினர் நேற்று இந்த ரெயிலில் திருச்சிக்கு பயணம் செய்தனர்.
இதற்காக 2-ம் வகுப்பு இருக்கை வசதி பெட்டியில் முன்பதிவு செய்திருந்தனர். இந்த ரெயில் விருதுநகரில் இருந்து புறப்பட்டு மாலை சுமார் 4.30 மணியளவில் திருமங்கலம் குண்டாறு ரெயில் பாலத்திற்கு அருகே வந்து கொண்டிருந்த போது, குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டது.
அப்போது, சுந்தரம் இயற்கை உபாதையை கழிக்க சென்றிருந்தார். இந்த நிலையில், பெண் பயணி தனியாக இருந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அந்த பெட்டியில் பயணம் செய்த 3 வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் திடீரென கத்தியை காட்டி மிரட்டி லட்சுமியின் கழுத்தில் இருந்த நகையை பறிக்க முயன்றுள்ளனர்.
தப்பி ஓட்டம்
இதனை சற்றும் எதிர்பார்க்காத அவர், பயத்தில் திருடன், திருடன் என கூச்சலிட்டார். இதையடுத்து இதனால், சுதாரித்து கொண்ட வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் ரெயிலில் இருந்து கீழே குதித்து தப்பிச்சென்றனர். இதனால், அவரது நகை திருடர்களின் கையில் சிக்காமல் தப்பியது. இதற்கிடையே, சக பயணிகள் ரெயிலின் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தி தப்பி ஓடியவர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் அதற்குள் வடமாநிலத்தை சேர்ந்த மர்மநபர்கள் தப்பி சென்றுவிட்டனர்.
இதனால் இந்த ரெயில் குண்டாறு ரெயில் பாலத்தில் சுமார்½ மணி நேரத்திற்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டது. டிக்கெட் பரிசோதகர் சம்பவம் நடந்த பெட்டிக்கு வந்து விசாரணை நடத்தினார். அத்துடன் ரெயில்வே போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர், ரெயில் அங்கிருந்து புறப்பட்டு மதுரை ரெயில் நிலையம் வந்தடைந்தது. மதுரை ரெயில் நிலையத்தில் சம்பவம் குறித்து, லட்சுமி மற்றும் டிக்கெட் பரிசோதகர் ஆகியோர் ரெயில்வே போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து மதுரை ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமூக விரோதிகளின் கூடாரம்
நெல்லையில் இருந்து திருமங்கலம் வரை இரட்டை அகலப்பாதை உள்ளது. ஆனால், திருமங்கலம்-மதுரை இடையே இரட்டை அகலப்பாதை பணிகள் நடந்து வருவதால், திருமங்கலம் ரெயில் நிலையத்திற்கு வரும் ரெயில்கள் அனைத்தும் 20 கி.மீ. வேகத்தில் இயக்கப்படுகின்றன. இதனை சமூக விரோதிகள் நோட்டமிட்டு திட்டமிட்டு இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், பட்டப்பகலில் ஓடும் ரெயிலில் அனைத்து பயணிகள் முன்னிலையில் இது போன்ற சம்பவங்கள் நடப்பது இதுவே முதல்முறையாகும். இந்த சம்பவம் பெண் பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.