டிரான்ஸ்பார்மரை உடைத்து காப்பர் கம்பிகள், ஆயில் திருட்டு
தேன்கனிக்கோட்டை அருகே கூட்டு குடிநீர் திட்ட நீரேற்று நிலைய டிரான்ஸ்பார்மரை உடைத்து காப்பர் கம்பிகள், ஆயில் திருட்டு போனது.
தேன்கனிக்கோட்டை தாலுகா கெலமங்கலம் ஒன்றியம் பெட்டமுகிலாளம் ஊராட்சிக்கு உட்பட்ட தட்டக்கரை பிரிவு சாலையில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து தட்டக்கரை, தொட்டமாலம், கோட்டையூர் கொல்லை, தாசர கொல்லை, சித்தாபுரம், காமகிரி, பெட்டமுகிலாளம் உள்ளிட்ட மொத்தம் 36 கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மர்ம நபர்கள் நீரேற்று நிலைய டிரான்ஸ்பார்மரை உடைத்து அதில் இருந்த காப்பர் கம்பிகள் மற்றும் ஆயில் ஆகியவற்றை திருடி சென்றனர். இதன் மதிப்பு ரூ.1½ லட்சம் ஆகும். மின்சார டிரான்ஸ்பார்மரை மர்ம நபர்கள் உடைத்து காப்பர் கம்பிகள், ஆயில் ஆகியவற்றை திருடி சென்றதால் நீரேற்று நிலையத்தில் இருந்து 36 கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.