செல்போன் கடையின் பூட்டை உடைத்து ரூ.2½ லட்சம் பொருட்கள் திருட்டு
ஓசூரில் செல்போன் கடையின் பூட்டை உடைத்து ரூ.2½ லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஓசூர்:
ஓசூரில் செல்போன் கடையின் பூட்டை உடைத்து ரூ.2½ லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
செல்போன் கடை
ஓசூர் அருகே பேடரபள்ளியில் உள்ள அண்ணா சிலை அருகே ஹரி என்பவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். இதில் புதிய செல்போன்கள் விற்பனை செய்தும், பழைய செல்போன்களை பழுது பார்த்து வருகிறார். மேலும் செல்போன் உதிரி பாகங்களும் விற்பனை செய்து வருகிறார். நேற்று முன்தினம் அவர் கடையை திறந்து விற்பனை செய்துள்ளார். பின்னர் விற்பனை செய்யப்பட்ட ரூ.17 ஆயிரத்தை கடையில் வைத்து விட்டு அவர் வீட்டுக்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் நேற்று காலை ஹரி வழக்கம் போல் கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் கடைக்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த 2 லேப்டாப், 6 விலை உயர்ந்த செல்போன்கள், உதிரி பாகங்கள் மற்றும் ரூ.17 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ.2½ லட்சம் ஆகும்.
வலைவீச்சு
பின்னர், அருகில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை அவர் பார்த்தார். அப்போது, நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து கடையில் இருந்த பொருட்களை திருடி சாக்குப்பையில் போட்டு சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து ஹரி, ஓசூர் சிப்காட் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.