12 பவுன் நகை, ரூ.4½ லட்சம் திருட்டு
காங்கயத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகை, ரூ.4½ லட்சத்தை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றனர்.
காங்கயத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகை, ரூ.4½ லட்சத்தை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றனர்.
இது பற்றி போலீ்்ஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
சர்வோதய சங்க மேலாளர்
திருப்பூர் மாவட்டம் காங்கயம் அய்யாசாமி நகரைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 57). காங்கயத்தில் உள்ள சர்வோதய சங்கத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த 26-ந்தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இதனால் அவரது குடும்பத்தினர் அனைவரும் கோவை தனியார் மருத்துவமனையில் இருந்தனர். இந்தநிலையில் நேற்று காலை வெங்கடாசலத்தின் குடும்பத்தினர் வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த நகை, பணம் திருட்டு போயிருந்தது. இது குறித்து உடனடியாக காங்கயம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டனர். வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகை, ரூ.4½ லட்சம் ஆகியவற்றை திருடிச்சென்றது தெரியவந்தது.
போலீ்ஸ் விசாரணை
இது குறித்து காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து திருடர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த திருட்டுச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.