வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை- மடிக்கணினி திருட்டு
ஒரத்தநாடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை-மடிக்கணினியை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஒரத்தநாடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை-மடிக்கணினியை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
வெளிநாட்டில் வேலை
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள வடசேரி கிராமத்தை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது45). இவர் கடந்த சில ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். இதனால் இவரது மனைவி புஷ்பா தங்கம் உள்ளிட்ட குழந்தைகளும் தென்காசியில் உள்ள அவரது தாயார் வீட்டில் தங்கி உள்ளனர். அவ்வப்போது வடசேரியில் உள்ள வீட்டை புஷ்பா தங்கம் பார்த்து செல்வது உண்டு.
அதன்படி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு புஷ்பா தங்கம் வடசேரியில் உள்ள வீட்டை பூட்டிவிட்டு, தென்காசிக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய தியாகராஜன் தனது மனைவி இருக்கக்கூடிய தென்காசிக்கு சென்றார். பிறகு நேற்று தியாகராஜன் அவரது சொந்த ஊராகிய வடசேரி வீட்டிற்கு வந்தார். அங்கு வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.
5 பவுன் திருட்டு
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த தியாகராஜன் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டிற்குள் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்து 5 பவுன் நகை மற்றும் மடிக்கணினி உள்ளிட்டவற்றை மர்ம ஆசாமிகள் திருடி சென்றிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து தியாகராஜன் கொடுத்த புகாரின் பேரில் பாப்பாநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் லேப்டாப்பை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.