லாரியில் பேட்டரி திருடிய வாலிபர் கைது
பேரளம் அருகே லாரியில் பேட்டரி திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பேரளம் அருகே லாரியில் பேட்டரி திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பேட்டரி திருட்டு
திருவாரூர் பேரளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த லாரி உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் தங்களுடைய லாரிகளை இரவு நேரத்தில் பேரளத்தில் உள்ள குட்செட்டில் நிறுத்தி வைப்பது வழக்கம். இந்த பகுதியில் 50-க்கும் மேற்பட்ட லாரிகள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இந்த லாரிகளில் இருந்து பேட்டரிகள் திருட்டு போவது அடிக்கடி நடந்தது. இதுகுறித்து பேரளம் போலீசில் பேரளம் லாரி ஓட்டுனர் மற்றும் உரிமையாளர் சங்க தலைவர் குமார் புகார் கொடுத்தார். அதன்பேரில் பேரளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
கைது
இந்த நிலையில் நேற்று முன்தினம் லாரி குட்செட் அருகில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் மடக்கிப்பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் லாரியில் இருந்து பேட்டரிகளை கழற்றி விற்றது தெரியவந்தது.
மேலும் அவர் அடியக்கமங்கலம் பகுதியை சேர்ந்த சிராஜுதீன் (வயது24) என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த பேட்டரியை பறிமுதல் செய்தனர்.