தர்மபுரியில் விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 11 பவுன் நகைகள் திருட்டு-நள்ளிரவில் மர்ம நபர்கள் கைவரிசை


தர்மபுரியில் விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 11 பவுன் நகைகள் திருட்டு-நள்ளிரவில் மர்ம நபர்கள் கைவரிசை
x
தினத்தந்தி 10 Feb 2023 12:15 AM IST (Updated: 10 Feb 2023 3:56 PM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரியில் கோவிலுக்கு சென்ற விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் நகைகளை திருடி சென்ற சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நகைகள் திருட்டு

தர்மபுரி குமாரசாமிபேட்டை நடேச கவுண்டர் தெருவை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 62). விவசாயியான இவர் தனது மனைவியுடன் குமாரசாமிபேட்டையில் நடந்த கோவில் தேர் திருவிழாவில் கலந்து கொள்ள சென்றார். நள்ளிரவில் மீண்டும் மனைவியுடன் வீட்டிற்கு திரும்பினார்.

அப்போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டிருந்தது. மேலும் அதில் வைக்கப்பட்டிருந்த 11 பவுன் நகைகள் திருடப்பட்டு இருந்தன. இரவில் கோவிலுக்கு செல்வதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடி சென்றது தெரியவந்தது.

போலீசார் விசாரணை

இது தொடர்பாக குப்புசாமி தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அங்கு பதிவாகி இருந்த கைரேகைகள், தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

இந்த திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து அதன் அடிப்படையிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story