தர்மபுரியில் கல்லூரி பேராசிரியை வீட்டில் 12 பவுன் நகை திருட்டு-மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
தர்மபுரி:
தர்மபுரியில் தனியார் கல்லூரி பேராசிரியை வீட்டில் 12 பவுன் நகைகளை திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பீரோ உடைப்பு
தர்மபுரி கோவிந்தசாமி தெருவை சேர்ந்தவர் செல்வி (வயது 39). இவர் தர்மபுரி அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது தாயாருடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் செல்வி வழக்கம் போல் கல்லூரிக்கு புறப்பட்டு சென்று விட்டார். அவருடைய தாய் கமலா வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றார்.
சில மணி நேரம் கழித்து மீண்டும் வீட்டிற்கு திரும்பிய போது வீட்டின் கதவில் போடப்பட்டிருந்த பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கமலா வீட்டிற்குள் சென்று பார்த்தார். அப்போது பீரோவின் கதவுகள் உடைக்கப்பட்டு பொருட்கள் கீழே சிதறி கிடந்தன. இதுகுறித்து கமலா, செல்விக்கு தகவல் தெரிவித்தார்.
12 பவுன் நகைகள் திருட்டு
இதையடுத்து செல்வி வீட்டிற்கு சென்று பார்த்தார். அப்போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 12 பவுன் நகைகள் திருடப்பட்டு இருந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த தர்மபுரி டவுன் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அங்கு பதிவாகி இருந்த கைரேகைகள் சேகரிக்கப்பட்டன.
தொடர்ந்து அங்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது வீட்டில் இருந்து மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடி சென்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
வலைவீச்சு
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கமலா வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நகை திருட்டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
பட்டப்பகலில் மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடி சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.