வீடு புகுந்து நகை, பணம் திருட்டு

வீடு புகுந்து நகை, பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச்சென்றனர்
காரைக்குடி
காரைக்குடி லட்சுமி நகர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சந்தோஷ் குமார். மீன் வியாபாரி. சம்பவத்தன்று சந்தோஷ்குமார் வீட்டை பூட்டி சாவியை கதவு நிலையில் வைத்து விட்டு இலுப்பைக்குடி சந்தைக்கு வியாபாரத்திற்கு சென்றுவிட்டார். அப்போது ஊரிலிருந்து அவரது மாமியார் ராதா சந்தோஷ் குமாரின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடப்பதை பார்த்து உள்ளே சென்ற போது வீட்டிற்கு உள்ளே இருந்து 18 வயது மதிக்கத்தக்க வாலிபர் வெளியே ஓடினாராம். உடனே ராதா வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ கதவுகள் திறந்து கிடந்தது மற்றும் வீட்டில் உள்ள பொருட்களும் சிதறிக்கிடந்தன. இது குறித்து ராதா சந்தோஷ் குமாருக்கு தகவல் கொடுத்தார். அவர் வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த ரூ.30 ஆயிரம், 4 பவுன் நகை ஆகியவை திருடு போனது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் அழகப்பாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.