பேரிகையில் நிதி நிறுவன உரிமையாளர் வீட்டில் 45 பவுன் நகை, பணம் திருட்டு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
ஓசூர்:
பேரிகையில் நிதி நிறுவன உரிமையாளர் வீட்டில் 45 பவுன் நகை, பணம் திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நிதி நிறுவன உரிமையாளர்
திருச்சியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 35). இவருடைய மனைவி முத்துலட்சுமி. இவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை ரிங் ரோடு அண்ணா நகர் பகுதியில் வசித்து வருகின்றனர். மேலும் சிவகுமார் அந்த பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் மனைவி முத்துலட்சுமியை திருப்பூரில் உள்ள அவரது தாய் வீட்டில் இருந்து சிவக்குமார் அழைத்து கொண்டு பேரிகை வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் உள்ளே சென்றபோது பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. மேலும் பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 45 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. மர்ம நபர்கள் வீட்டின் முன்பக்கம் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களையும் உடைத்துவிட்டு உள்ளே புகுந்தது தெரியவந்தது.
பரபரப்பு
இதுகுறித்து சிவக்குமார் பேரிகை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த தடயங்களை பதிவு செய்து கொண்டனர்.
சிவக்குமார் வெளியூர் செல்வதை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டுக்குள் ஏறி குதித்து பூட்டை உடைத்து துணிகர திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். நிதி நிறுவன உரிமையாளர் வீட்டில் நகை, பணம் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.