ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் வீட்டில் திருட்டு:முதியவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை


ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் வீட்டில் திருட்டு:முதியவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை
x

ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் வீட்டில் நடந்த திருட்டு தொடர்பான வழக்கில் முதியவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கும்பகோணம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

தஞ்சாவூர்

ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் வீட்டில் நடந்த திருட்டு தொடர்பான வழக்கில் முதியவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கும்பகோணம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

ஓய்வு பெற்ற வங்கி ஊழியர்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சாரங்கபாணி கோவில் சன்னதி தெரு பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது80). ஓய்வு பெற்ற வங்கி ஊழியர். ஸ்ரீரங்கம் வடக்கு அடைய வளஞ்சான் தெரு பகுதியை சேர்ந்தவர் சந்தான கோபாலன் (60). என்ஜினீயர் பட்டதாரி.

கடந்த ஆண்டு (2022) ஜனவரி மாதம் 11-ந் தேதி ஜெகநாதன் சாரங்கபாணி கோவிலுக்கு சாமி கும்பிட சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த சந்தான கோபாலன் தனது மகளுக்கு வரன் பார்க்க வேண்டும் எனக்கூறி ஜெகநாதனிடம் பேச்சு கொடுத்துள்ளார்.

கைது

இதில் ஏற்பட்ட பழக்கத்தில் ஜெகநாதன் சந்தானகோபாலனை தனது வீட்டுக்கு அழைத்துச்சென்று வரன் குறித்து பேசிவிட்டு அனுப்பி வைத்துள்ளார். பின்னர் இரவு சாப்பிட சென்ற ஜெகநாதன் தனது வீட்டின் சமையலறையில் இருந்த வெள்ளி டம்ளர் மற்றும் வீட்டில் பீரோவில் வைத்திருந்த ரூ.1500 ரொக்கம் ஆகியவற்றை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

வீட்டுக்கு வந்த சந்தானகோபாலன் அவற்றை திருடிச்சென்று இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து ஜெகநாதன் கும்பகோணம் கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தான கோபாலனை கைது செய்தனர்.

3 ஆண்டுகள் சிறை

இந்த வழக்கு கும்பகோணம் குற்றவியல் 1-ம் நம்பர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. நேற்று இந்த வழக்கில் இறுதி விசாரணை முடிந்து தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது நீதிபதி பாரதிதாசன், சந்தான கோபாலனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் 9 மாதங்கள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார்.

சந்தானகோபாலன் மீது திருச்சி, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் கூறினர்.


Next Story