திருமண செலவுக்கு பணம் தேவைப்பட்டதால் நகைபறித்த புதுமாப்பிள்ளை கைது
திருமண செலவுக்கு பணம் தேவைப்பட்டதால் பெண்ணிடம் நகை பறித்த புதுமாப்பிள்ளையை போலீசார் கைது செய்தனர்.
அனுப்பர்பாளையம்,
திருமண செலவுக்கு பணம் தேவைப்பட்டதால் பெண்ணிடம் நகை பறித்த புதுமாப்பிள்ளையை போலீசார் கைது செய்தனர்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
சங்கிலி பறிப்பு
திருப்பூர் பி.என்.ரோடு பூலுவப்பட்டியை அடுத்த தோட்டத்துப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமநாதன். இவருடைய மனைவி சங்கீதா (வயது 40). இவர் நேற்றுகாலை வீட்டின் வெளியே துணி துவைத்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார்சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 25 வயது வாலிபர் ஒருவர் திடீரென சங்கீதா கழுத்தில் கிடந்த 3¾ பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த சங்கீதா திருடன்...திருடன்... என்று கூச்சல் போட்டார். அவருடைய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அந்த வாலிபரை பிடித்து திருமுருகன்பூண்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் திருப்பூர் பி.என்.ரோடு மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் (27) என்பதும், அவர் பனியன் பிரிண்டிங் நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதும் தெரிய வந்தது.
கைது
மேலும் விக்னேசுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு திருமணத்திற்கு இன்னும் 2 வாரமே உள்ள நிலையில் திருமணத்திற்கு பணம் பற்றாக்குறை ஏற்பட்டதால் இதுபோன்று சங்கிலி பறிப்பில் ஈடுபட்டதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விக்னேசை கைது செய்தனர். திருப்பூரில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட வாலிபர் சங்கிலி பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு சிறைக்கு சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.