வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை திருட்டு
திருவண்ணாமலையில் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை வேங்கிக்கால் துரைசாமி நகரை சேர்ந்தவர் ஜெயக்குமார், தனியார் சர்க்கரை ஆலையின் ஓய்வு பெற்ற அலுவலர்.
இவரது மனைவிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள அவரது மகள் வீட்டிற்கு வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார்.
இந்த நிலையில் இன்று காலை ஜெயக்குமாரின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டுள்ளதாக அக்கம் பக்கத்தினர் அவருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் அவர் சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு விரைந்து வந்தார். அப்போது வீட்டில் இருந்த பொருட்கள் கலைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் 10 பவுன் நகை மற்றும் 12 கிலோ வெள்ளி பொருட்கள் மர்ம நபர்களால் திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர் திருவண்ணாமலை கிழக்கு போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களின் கை ரேகைகளை பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.