நகை வாங்குவது போல் நடித்து 26 கிராம் தங்கக்கட்டி திருட்டு


நகை வாங்குவது போல் நடித்து 26 கிராம் தங்கக்கட்டி திருட்டு
x

பெரம்பலூரில் நகை வாங்குவது போல் நடித்து 26 கிராம் தங்கக்கட்டியை திருடி சென்ற 2 மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பெரம்பலூர்

நகைக்கடை

பெரம்பலூர் பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் சின்னசாமி (வயது 64). இவர் கடைவீதியில் தேரடி பஸ் நிறுத்தம் அருகே நகைக்கடை நடத்தி வருகிறார். நேற்று மதியம் இவரது கடைக்கு 2 மர்ம ஆசாமிகள் வந்தனர். அப்போது சின்னசாமி மட்டும் கடையில் இருந்துள்ளார். ஊழியர்கள் இல்லை.

இந்த நிலையில் கடைக்கு வந்த 2 பேரும் அங்குள்ள ஷோகேஸில் உள்ள குறிப்பிட்ட ரகங்களை காண்பித்து அந்த நகை வேண்டும் என்றனர். பின்பு மற்றொரு ஷோகேஸில் இருந்த நகையை காண்பிக்குமாறு சின்னசாமியுடன் கூறியுள்ளனர்.

26 கிராம் தங்கக்கட்டி திருட்டு

அவர் நகை எடுத்து காண்பித்த நேரத்திற்கு இடையே சின்னசாமி நகை செய்வதற்காக கல்லாப்பெட்டி அருகே வைத்திருந்த 26 கிராம் எடை கொண்ட (3¼ பவுன்) தங்கக்கட்டியை எடுத்து மறைத்து வைத்துக் கொண்டனர். பின்னர் தங்களுக்கு வேறு மாடலில் நகை வேண்டும் என்று கூறி அங்கிருந்து வெளியே சென்று விட்டனர். சிறிது நேரம் கழித்து அவர்கள் 2 பேரும் 26 கிராம் தங்கக்கட்டியை திருடி சென்றது சின்னசாமிக்கு தெரியவந்தது.

இதையடுத்து அவர் பெரம்பலூர் போலீசில் புகார் அளித்தார். அதன்ேபரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவை கைப்பற்றி அதில் பதிவாகியுள்ள வீடியோ ஆதாரத்தை வைத்து, கடையில் தங்கக்கட்டியை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

பெரம்பலூர் கடைவீதியில் பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் நகைக்கடை உரிமையாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story