28 பவுன் நகை, பணம் திருட்டு
கோவையில் 2 வீடுகளின் பூட்டை உடைத்து 28 பவுன் நகை மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கோவை
கோவையில் 2 வீடுகளின் பூட்டை உடைத்து 28 பவுன் நகை மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
நகைகள் திருட்டு
கோவை சரவணம்பட்டி அருகே சிவானந்தபுரம் கிருஷ்ணா அவென்யூவை சேர்ந்தவர் கண்ணன் (வயது 38). மோட்டார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 21-ந் தேதி இரவு கண்ணன் தனது மனைவி, குழந்தை மற்றும் தாயுடன் வீட்டை பூட்டி விட்டு சினிமாவுக்கு சென்றார். வீட்டின் முதல் மாடியில் அவரது தந்தை மோகன் மட்டும் தூங்கிக் கொண்டிருந்தார்.
சினிமா முடிந்து கண்ணன் தனது குடும்பத்தினருடன் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். இதில் வீட்டில் உள்ள பீரோவில் வைக்கப்பட்டிருந்த தங்க செயின்கள், வளையல்கள், மோதிரம், கை செயின் என மொத்தம் 18 பவுன் தங்க நகைகள் திருட்டு போயிருந்தது.
வலைவீச்சு
கண்ணன் வெளியே சென்றதை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் வீட்டின் கதவை உடைத்து, உள்ளே சென்று நகைகளை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து கண்ணன் சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு பதிவாகி இருந்த கைரேகைகள் மற்றும் தடயங்களை சேகரித்தனர். இதில் 3 பேரின் கைரேகைகள் பதிவாகி இருந்தன. அத்துடன் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
இதேபோல் கோவை கணபதி இளங்கோ நகரை சேர்ந்தவர் முஸ்தபா (53). சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இவரது சகோதரர் ஹசீபா பீளமேடு புரானி காலனியில் வசித்து வருகிறார். இவர் கடந்த 18-ந்தேதி துபாய் சென்றார். நேற்று அவரது உறவினர் ஒருவர் ஹசீபாவின் வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது.
இது குறித்து அவர், முஸ்தபாவுக்கு தகவல் கொடுத்தார். அவர் அங்கு சென்று பார்த்த போது, பீரோவில் வைத்திருந்த 10 பவுன் தங்க வளையல், ரூ.50 ஆயிரம் பணம் மற்றும் 5 கைக் கடிகாரங்கள் திருட்டுபோனது தெரியவந்தது.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த முஸ்தபா இதுகுறித்து பீளமேடு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை மற்றும் பணம், கைக்கடிகாரங்களை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.