வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை-ரூ.50 ஆயிரம் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை-ரூ.50 ஆயிரம் திருட்டுபோனது.
நகை-பணம் திருட்டு
திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலை அருகே உள்ள இந்திரா சுந்தர் நகரை சேர்ந்தவர் செல்வராஜ்(வயது 58). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் நாமக்கல் அருகே வேலூரில் உள்ள தன்னுடைய உறவினர் வீட்டிற்கு கோவில் திருவிழாவிற்காக சென்றார். இந்நிலையில் அவரது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது உறவினர், இது குறித்து செல்போன் மூலம் செல்வராஜுக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து ஊருக்கு திரும்பிய செல்வராஜ் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் அறையில் உள்ள பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம், மோட்டார் சைக்கிள் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இது குறித்து செல்வராஜ் அளித்த புகாரின்பேரில் பெட்டவாய்த்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்துகளில் 3 பேர் பலி
*தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையை சேர்ந்த பிரபாகரன் (33)நேற்று முன்தினம் பூச்சி மருந்து(விஷம்) குடித்த நிலையில், திருச்சி ஜங்ஷன் அருகே மயங்கி கிடந்தார். உடனே அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்தார். இது குறித்து கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
*ஜீயபுரத்தை அடுத்த முக்கொம்பு சுற்றுலா மையம் அருகே நேற்று முன்தினம் இரவு சுமார் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் சாலையை கடந்தபோது, அந்த வழியாகச் சென்ற வாகனம் மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து ஜீயபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
*திருச்சி உறையூர் சோழமாநகர் பகுதியை சேர்ந்த சின்னத்தம்பியின் மகன் மணிகண்டன்(23). இவர் கண்காணிப்பு கேமரா சர்வீஸ் செய்யும் வேலை செய்து வந்தார். இந்நிலையில் இவர் ஒரு மோட்டார் சைக்கிளில் தன்னுடைய நண்பர்களான விமல்குமார் மற்றும் சூர்யா ஆகியோருடன் ஜீயபுரம் பகுதியில் இருந்து திருச்சி நோக்கி சென்றார். மோட்டார் சைக்கிளை மணிகண்டன் ஓட்டினார். கடியாக்குறிச்சி பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது திருச்சியில் இருந்து கரூர் நோக்கிச் சென்ற கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 3 பேரும் படுகாயமடைந்த நிலையில் மணிகண்டன் பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பேரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து ஜீயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
*தா.பேட்டை அடுத்த வீரமச்சான்பட்டி கிராமத்தை சேர்ந்த அழகனின் மகன் அஜித்(24). சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவர் வீரமச்சான்பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றபோது சக்கம்பட்டி கிராமத்தில் சாலையோர புளிய மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
தந்தை-மகன் மீது வழக்கு
*காட்டுப்புத்தூர் அருகே சீலைப்பிள்ளையார் புதூரை சேர்ந்தவர் சுதாகர் (47). இவர், வீட்டின் பின்புறம் உள்ள தென்னை மரம் சவுந்தர்ராஜன் (56) வீட்டு பகுதியில் சாய்ந்தது. இதையடுத்து சவுந்தர்ராஜன், அவரது மகன் அருண்குமார் (32) ஆகிய இருவரும் சுதாகரிடம் தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கியுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில், காட்டுப்புத்தூர் போலீசார் தந்தை-மகன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.