விவசாயியிடம் நூதன முறையில் 6 பவுன் நகை, பணம் திருட்டு
ஆத்தூர்:-
ஆத்தூர் அருகே விவசாயியிடம் நூதன முறையில் 6 பவுன் நகை, பணம் திருடிய 2 வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விவசாயி
ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் தெற்கு காடு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 60). விவசாயி. இவர் நேற்று மதியம் ஆத்தூர் விநாயகபுரத்தில் உள்ள ஒரு வங்கியில் நகைகளை அடகு வைத்து ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் பெற்றார். பின்னர் பணம் மற்றும் தன்னிடம் இருந்த 6 பவுன் நகைகளை பையில் போட்டு மொபட்டின் சீட்டுக்கு அடியில் வைத்தார்.
இதையடுத்து அவர் மொபட்டில் மஞ்சினியில் உள்ள தனது உறவினர் தங்கராசு மகன் மணிகண்டனிடம் பணத்தை கொடுக்க சென்றார். அப்போது மஞ்சினி ெரயில்வே கேட் அருகே சென்றபோது ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் உங்கள் மொபட்டில் இருந்து பணம் கீழே விழுகிறது என கூறினர்.
நகை, பணம் திருட்டு
மேலும் செல்வராஜை நம்ப வைக்க 4 பத்து ரூபாய் நோட்டுகளை சாலையில் போட்டனர். இது தன்னுடைய பணம் என நம்பிய அவர் மொபட்டை நிறுத்தி சாலையில் கிடந்த ரூபாய் நோட்டுகளை எடுத்து கொண்டிருந்தார். அப்போது 2 வாலிபர்களும் மொபட்டின் சீட்டை திறந்து அதில் இருந்த பணம், நகைகளை திருடி கொண்டு தப்பி சென்று விட்டனர்.
இந்த திருட்டு சம்பவம் குறித்து செல்வராஜ் ஆத்தூர் டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் ஆத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு நாகராஜன், டவுன் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து 2 வாலிபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். விவசாயிடம் நூதன முறையில் ஏமாற்றி பணம், நகை திருடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.