கோவில் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ திருட்டு
மயிலாடுதுறையில் கோவில் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ திருடிய மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மயிலாடுதுறை சேர்ந்தங்குடி ஆனதாண்டவபுரம் சாலை திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் சரவணன் (வயது 39). ஆட்டோ டிரைவரான இவர் அந்த பகுதியில் உள்ள வள்ளலார் கோவிலில் இரவு காவலராகவும் இருந்து வருகிறார். சம்பவத்தன்று ஆட்டோ சவாரிகளை முடித்துவிட்டு இரவு 10 மணிக்கு வள்ளலார் கோவில் வாசலில் ஆட்டோவை நிறுத்திவிட்டு கோவிலுக்குள் சென்றுள்ளார். அதிகாலை 5 மணிக்கு வெளியே வந்து பார்த்தபோது ஆட்டோ காணாமல் போயிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சரவணன் அக்கம் பக்கத்தில் தேடி பார்த்துள்ளார். ஆனால் ஆட்டோ கிடைக்கவில்லை. இதையடுத்து மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் சரவணன் புகார் அளித்தார். புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். மேலும் சி.சி.டி.வி. கேமரா பதிவுகளில் பதிவான ஆட்டோவை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.