பறிமுதல் செய்யப்பட்ட லாரியில் பொருட்கள் திருட்டு
தனியார் நிதி நிறுவனத்தால் பறிமுதல் செய்யப்பட்ட லாரியில் பொருட்கள் திருட்டு
விழுப்புரம்
கடலூர் மாவட்டம் வடலூர் தாலுகா பார்வதிபுரத்தை சேர்ந்தவர் சிவலிங்கம் மகன் செல்வக்குமார் (வயது 32), லாரி உரிமையாளர். இவர் புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தின் மூலம் ரூ.10 லட்சத்துக்கு டிப்பர் லாரி ஒன்று வாங்கினார். இதற்காக அவர் மாத தவணையாக ரூ.38 ஆயிரம் வீதம் கட்டி வந்த நிலையில் கடைசி 3 மாதங்கள் தவணை தொகையை கட்டவில்லை. இதனால் அந்த நிதி நிறுவன மேலாளரான பிரகாஷ் உள்ளிட்ட 4 பேர் சேர்ந்து லாரியை பறிமுதல் செய்தனர். பின்னர் சில நாட்கள் கழித்து செல்வக்குமார், மொத்தமாக ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்தை அந்நிறுவனத்தில் செலுத்திவிட்டு தனது டிப்பர் லாரியை பார்த்தபோது லாரியில் பொருத்தப்பட்டிருந்த ஜி.பி.எஸ். கருவி, லாரியின் செண்ட்ர் ஜாயிண்ட் ஆகியவை சேதமடைந்திருந்தது. மேலும் லாரியில் இருந்த 2 யூனிட் மணல், ஸ்டெப்னி டயர், இரும்புக்கம்பி ஆகியவை திருட்டுப்போயிருந்ததை அறிந்து செல்வக்குமார் அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து அவர், விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் பிரகாஷ் உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.