வீட்டு ஜன்னலை உடைத்து நகை திருட்டு
வடலூரில் வீட்டு ஜன்னலை உடைத்து நகையை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வடலூர் மாருதி நகர் கோட்டக்கரை பகுதியை சேர்ந்தவர் தேவநாதன். இவரது மனைவி சுமித்ரா (வயது 43). இவர்கள் கடந்த 9-ந் தேதி தங்களது வீட்டை பூட்டி விட்டு ஆரணியில் நடந்த தங்கள் உறவினர் மகள் திருமணத்திற்கு சென்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர்கள் மீண்டும் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் வலது பக்க ஜன்னல் உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து அவர்கள் வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 5 கிராம் நகை, 200 கிராம் வெள்ளி கொலுசு ஆகியவற்றை காணவில்லை. அதனை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரிந்தது.
வலைவீச்சு
இது குறித்த புகாரின் பேரில் வடலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் தேவநாதன் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள், அவரது வீட்டு ஜன்னலை உடைந்து உள்ளே புகுந்து நகையை திருடிச்சென்றது தெரிந்தது. தொடர்ந்து இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.