(செய்தி சிதறல்ஸ்) வீட்டின் பூட்டை உடைத்து நகைகள்-பணம் திருட்டு


(செய்தி சிதறல்ஸ்) வீட்டின் பூட்டை உடைத்து  நகைகள்-பணம் திருட்டு
x

வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருச்சி

வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருட்டு

திருச்சி கருமண்டபம் ஜெயநகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி சிவகாமி (வயது 40). சம்பவத்தன்று காலையில் இவர் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றார். பின்னர் மாலையில் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைந்து கிடந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டு பீரோவில் இருந்த 2 பவுன் தங்கச் சங்கிலி, 5 கிராம் தங்க ஜிமிக்கி, 4 கிராம் மோதிரம், 4 கிராம் கம்மல் உள்ளிட்ட தங்க நகைகள் மற்றும் ரூ.15 ஆயிரம் உள்ளிட்டவை திருடு போய் இருந்தது. இது குறித்து சிவகாமி செசன்சு கோர்ட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 கிலோ கஞ்சா பறிமுதல்

*திருச்சி பாலக்கரை தருமநாதபுரம் பகுதியில் கஞ்சா விற்றதாக அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்த தாமஸ் அந்தோணி (23), ராஜேஷ் (23) ஆகியோரை பாலக்கரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

செல்போன் பறிப்பு

*திருச்சி துவாக்குடி முன்னாள் ராணுவத்தினர் காலனி பெல் நகரை சேர்ந்த குமார் (51). இவர் திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள ஒரு டெய்லர் கடையில் டெய்லராக வேலை பார்த்து வருகிறார். இவர் சம்பவத்தன்று வேலை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக டி.வி.எஸ் டோல்கேட் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஏருகலா சரண் (19) என்பவர் அவரது சட்டை பையில் இருந்த செல்போனை திருடி விட்டு தப்பியோட முயன்றார். அப்பகுதி மக்கள் அவரை பிடித்து கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்தனர்.

2-வது நாளாக உண்ணாவிரதம்

*திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அகதிகளுக்கான சிறப்பு முகாம் உள்ளது. இங்கு வெளிநாடுகளைச் சேர்ந்த குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் வழக்கு முடிந்தவர்களை சொந்தநாட்டுக்கு அனுப்பி வைக்க கோரி நேற்று முன்தினம் உண்ணாவிரம் இருந்தனர். 2-வது நாளாக நேற்றும் இந்த போராட்டம் நடைபெற்றது. கோரிக்கை நிறைவேறும் வரையில் உண்ணாவிரதம் தொடர்ந்து நடைபெறும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

சிலிண்டர் திருட்டு

*திருச்சி உறையூர் சாலை ரோடு வெட்டுபுலி சந்து சாலை ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முகமது அக்ரம் அலி (37). இவரது வீட்டில் உள்ள சிலிண்டரை திருட முயன்ற உறையூர் முஸ்லிம் தெருவை சேர்ந்த மன்சூர் அலி (22) என்பவரை உறையூர் போலீசார் கைது செய்தனர்.

ரெயிலில் பாட்டில் வீசியவர் ைகது

*தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியை சேர்ந்தவர் போஜன். இவர் சம்பவத்தன்று பயணிகள் ரெயிலில் மாயவரத்தில் இருந்து திருச்சிக்கு வந்து கொண்டிருந்தார். அந்த ரெயில் திருவெறும்பூர் அருகே வரும் போது திருவெறும்பூர் பாரதிநகர் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் என்கிற சதீஸ் (33) என்பவர் குடிபோதையில் அந்த ரெயில் மீது பாட்டிலை தூக்கி எறிந்தார். இதில் ரெயில் பெட்டியின் கண்ணாடி உடைந்து ரெயில் பயணம் செய்த போஜன் மீது பட்டது. இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து திருச்சி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து லோகநாதன் என்கிற சதீசை கைது செய்தனர்.


Related Tags :
Next Story