அடுத்தடுத்து 2 கடைகளில் பூட்டை உடைத்து பணம், பொருட்கள் திருட்டு
திருவெண்ணெய்நல்லூர் அருகே அடுத்தடுத்து 2 கடைகளில் பூட்டை உடைத்து பணம், பொருட்கள் திருட்டு
திருவெண்ணெய்நல்லூர்
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சரவணம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணசாமி(வயது 55). பெரியசெவலை சரவணம்பாக்கம் கூட்டுரோட்டில் பழக்கடை நடத்தி வரும் இவர் நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டி விட்டு சென்றார். பின்னர் நேற்று காலை கடையை திறக்க வந்தபோது கடையின் இரும்பு ஷட்டரில் போடப்பட்ட பூட்டு உடைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள் கடையில் புகுந்து அங்கிருந்த பழங்களையும், மேலும் கல்லாப்பெட்டியை உடைத்து அதில் இருந்த ரூ.3,250-ஐயும் திருடி சென்றது தெரியவந்தது.
இதேபோல் அருகில் உள்ள பெரியசெலை கிராமத்தை சேர்ந்த ரவி என்பவரின் கடையை உடைத்து அங்கிருந்த சில பொருட்களையும் திருடி சென்றுள்ளனர். இது பற்றிய தகவல் அறிந்து வந்த திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் திருட்டு நடந்த கடைகளை பார்வையிட்டு பணம், பொருட்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.