தேங்காய் குடோன் உரிமையாளரிடம் பணம் திருட்டு
தேங்காய் குடோன் உரிமையாளரிடம் பணம் திருடியவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்
கொட்டாம்பட்டி,
கொட்டாம்பட்டி அருகே உள்ள சின்ன கொட்டாம்பட்டியை சேர்ந்த குன்னங்குடியான் என்பவரின் மகன் பெரியகருப்பன் (வயது75). இவர் சின்னகொட்டாம்பட்டி விலக்கு அருகே மதுரை-திருச்சி நான்கு வழி சாலையில் தேங்காய் குடோன் வைத்து தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் கொட்டாம்பட்டியில் உள்ள வங்கியில் இருந்து ரூ.1½ லட்சம் எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தேங்காய் குடோன் சென்றுள்ளார். இவரை மர்ம நபர்கள் இரண்டு மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து சென்றுள்ளனர். பின்னர் தேங்காய் குடோனில் மோட்டார் சைக்கிளை நிறுத்திய பெரியகருப்பனிடம் தேங்காய் வாங்குவது போல் பேசிய மர்ம நபர்கள், அவரது மோட்டார் சைக்கிளில் இருந்த ரூ.1½ லட்சத்தை திருடிக்கொண்டு தப்பி சென்றுவிட்டனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெரியகருப்பன் இந்த சம்பவம் தொடர்பாக கொட்டாம்பட்டி போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.