ஜவுளி கடையில் பணம் திருட்டு
ஜவுளி கடையில் பணம் திருட்டுபோனது.
பெரம்பலூர்-வடக்கு மாதவி ரோடு கணபதி நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 39). இவர் அதே பகுதியில் ஜவுளிக்கடை வைத்துள்ளார். கடையை செந்தில்குமாரின் மனைவி சரண்யா (26) கவனித்து வருகிறார். நேற்று முன்தினம் மதியம் சரண்யா கடையின் கண்ணாடி கதவை மட்டும் பூட்டி விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். மாலையில் செந்தில்குமார் கடையின் ஷட்டர் கதவை இறக்கி விட்டு பூட்டாமல் சென்றார். இரவு செந்தில்குமாரின் நண்பர் ஒருவர் கடையை பூட்டிவிட்டு வந்துள்ளார்.
இதையடுத்து நேற்று காலை கடையின் ஷட்டர் கதவை சரண்யா திறந்தபோது, கடையில் கண்ணாடி கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் கல்லாவில் இருந்த ரூ.33 ஆயிரத்து 500 திருட்டு போயிருந்தது. இதனால் அவர் அதிர்ச்சியடைந்தார். இது குறித்த தகவலின்பேரில் பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் நேற்று முன்தினம் அந்த பகுதியில் சந்தேகம்படும்படியாக சுற்றித்திரிந்த நபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.