என்ஜினீயர் வீட்டில் ரூ.4 லட்சம் திருட்டு
வத்தலக்குண்டுவில், என்ஜினீயர் வீட்டில் ரூ.4 லட்சம் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு விசாலாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமரன் (வயது 50). என்ஜினீயர். இவரது குடும்பத்தினர், கோவையில் வசித்து வருகின்றனர். செந்தில்குமரன் மட்டும் வத்தலக்குண்டுவில் குடியிருந்து, அப்பகுதியில் கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்தநிலையில் கடந்த 27-ந்தேதி வீட்டை பூட்டி விட்டு தனது உறவினர்களுடன் செந்தில்குமரன் ராமேசுவரம் சென்றார். பின்னர் நேற்று முன்தினம் செந்தில்குமரன் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த ரூ.2 லட்சம் மற்றும் ரூ.2 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர்கள் திருட்டு போய் இருந்தது. செந்தில்குமரன் வெளியூர் சென்றதை நோட்டமிட்டு மர்ம நபர்கள் பூட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்து பணத்தை திருடியது தெரியவந்தது.
இதுகுறித்து வத்தலக்குண்டு போலீஸ் நிலையத்தில் செந்தில்குமரன் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன், சப்-இன்ஸ்பெக்டர் சேக் அப்துல்லா ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் அங்கு சிதறி கிடந்த பொருட்களை போலீசார் பார்வையிட்டனர். சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வீட்டில் பதிவான ரேகைகளை பதிவு செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.