தேவாரத்தில் செங்கல் சூளை உரிமையாளர் வீட்டில் ரூ.6 லட்சம் நகை-பணம் திருட்டு
தேவாரத்தில் செங்கல் சூளை உரிமையாளர் வீட்டில் ரூ.6 லட்சம் நகை-பணம் திருடுபோனது.
செங்கல் சூளை
தேவாரத்தில், மூணான்டிபட்டி- மேட்டுப்பட்டி சாலையில் வசிப்பவர் வேல்முருகன் (வயது 40), இவர், அதே பகுதியில் செங்கல் சூளை நடத்தி வருகிறார். கடந்த 6-ந்தேதி இவர், வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் மதுரையில் உள்ள பாண்டி கோவிலுக்கு சென்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் வீட்டிற்கு வந்தார். அப்போது கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு வீடு திறந்து கிடந்தது.
இதனால் அதிா்ச்சி அடைந்த வேல்முருகன் உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த துணிமணி, பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் அதில் இருந்த நகை-பணம் திருடுேபாய் இருந்தது. இதையடுத்து அவர் தேவாரம் போலீசுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் வேல்முருகன் குடும்பத்துடன் வெளியூர் சென்றதை மர்ம நபர்கள் நோட்டமிட்டுள்ளனர். பின்னர் அவர்கள் வீடு புகுந்து பீரோவில் இருந்த ரூ.6 லட்சம் மதிப்பிலான நகை-பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தேவாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
தேவாரம் அருகே உள்ள கிருஷ்ணம்பட்டியை சேர்ந்தவர் அன்பரசு (31). இவர், கியாஸ் ஏஜென்சியில் சிலிண்டர் வினியோகம் செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர், வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார். மறுநாள் அவர்கள் திரும்பி வந்தனர். அப்போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
இதனால் அதிா்ச்சி அடைந்த அன்பரசு உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோ திறந்து கிடந்தது. மேலும் அதில் இருந்த வெள்ளி பொருட்கள் திருடுபோய் இருந்தது. இதுகுறித்து அவர் தேவாரம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.