பழைய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தில் ரூ.25 ஆயிரம் பொருட்கள் திருட்டு
குளித்தலை அருகே பழைய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ.25 ஆயிரம் பொருட்களை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம்
கரூர் மாவட்டம், குளித்தலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது மணத்தட்டை ஊராட்சி. இந்த ஊராட்சி மன்ற அலுவலகம் குளித்தலை அருகே உள்ள எழுநூற்றுமங்களம் பகுதியில் உள்ளது. இந்த ஊராட்சி அலுவலக கட்டிடம் சேதமடைந்த காரணத்தால் கடந்த சில ஆண்டுகளாக ஊராட்சி அலுவலகப் பணிகள் அருகில் உள்ள நூலக கட்டிடத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்தநிலையில் பழுதடைந்த ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தின் பின்பகுதியில் உள்ள இரும்பிலான ஜன்னல் கம்பிகள் அறுத்து எடுக்கப்பட்டு இருப்பதாக ஊராட்சி மன்ற தலைவர் ஜெகநாதனுக்கு தகவல் கிடைத்துள்ளது.
ரூ.25 ஆயிரம் பொருட்கள் திருட்டு
அதன் பேரில் அவர் அங்கு சென்று பார்த்தபோது ஜன்னல் கம்பிகள் உடைக்கப்பட்டு அதன் வழியாக பழைய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தில் வைக்கப்பட்டிருந்த இரும்பிலான பைப்புகள், திட்டப்பனைகள் அடங்கிய விளம்பர போர்டு, மின்விசிறி, ஐன்னல் ஆகியவை மர்ம நபர்களால் திருடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.அதுபோல இங்குள்ள நூலக கட்டிடத்தின் அருகே கழிவு நீர் சாக்கடையின் மேல் போடப்பட்டிருந்த இரும்பிலான பிளேட்டுகளும் திருடப்பட்டுள்ளது. திருடுபோன பொருட்களின் மதிப்பு ரூ.25 ஆயிரம் என கூறப்படுகிறது.இதுகுறித்த புகாரின்பேரில் குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து பொருட்களை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.