தொழிலாளியிடம் ரூ.30 ஆயிரம் திருட்டு
சேலம் புதிய பஸ்நிலையத்தில் தூங்கிய தொழிலாளியிடம் ரூ.30 ஆயிரம் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சேலம் புதிய பஸ்நிலையத்தில் தூங்கிய தொழிலாளியிடம் ரூ.30 ஆயிரம் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ரூ.30 ஆயிரம் திருட்டு
கடலூர் மாவட்டம் கிளிமங்களம் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். இவர், கேரளாவில் கூலிவேலை செய்து வருகிறார். தீபாவளி பண்டிகைக்கு அவர் சொந்த ஊருக்கு செல்வதற்காக கேரளாவில் இருந்து நேற்று முன்தினம் சேலத்திற்கு வந்தார். அப்போது கையில் ரூ.30 ஆயிரம் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. கடலூர் செல்ல பஸ்கள் இல்லாததால் பஸ் நிலையத்திலேயே வேல்முருகன் படுத்து தூங்கியதாக தெரிகிறது. அவர் அருகில் 2 பேர் படுத்திருந்தனர்.
நள்ளிரவில் வேல்முருகன் திடீரென எழுந்து பார்த்தபோது, பணம் வைத்திருந்த பையை மர்ம நபர்கள் திருடி சென்றிருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அப்போது, தனது அருகில் படுத்திருந்த 2 பேர் மீது சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
2 பேர் கைது
தொடர்ந்து வேல்முருகனை போலீசார், அவர் படுத்து தூங்கிய இடத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியதோடு பணத்தை திருடிய மர்ம நபர்களையும் தேடி வந்தனர். அப்போது, பணத்தை திருடிய மர்ம நபர்கள் அப்பகுதியில் பதுங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 2 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து ரூ.30 ஆயிரத்தை மீட்டனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் ஆந்திரா மாநிலம் சித்தூர் பகுதியை சேர்ந்த நாகேந்திரன் (வயது 52) மற்றும் ஆம்பூரை சேர்ந்த சீனிவாசன் (40) என்பதும், இவர்கள் திருட்டு, கொள்ளையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. பிறகு அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.