சப்- இன்ஸ்பெக்டரின் மோட்டார் சைக்கிள் திருட்டு
கோவை போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்துக்குள் புகுந்து சப்-இன்ஸ்பெக்டரின் மோட்டார் சைக்கிளை திருடிச் சென்ற மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கோவை போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்துக்குள் புகுந்து சப்-இன்ஸ்பெக்டரின் மோட்டார் சைக்கிளை திருடிச் சென்ற மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்
கோவை -அவினாசி ரோட்டில் போலீஸ் பயிற்சி பள்ளி மைதானம் உள்ளது. இங்கு போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள குடியிருப்புகளில் கோவை மாநகர், புறநகர் மற்றும் ஆயுதப் படையில் பணியாற்றும் போலீசார் தங்கள் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள்.
இதில் செல்வபுரம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக் டராக பணியாற்றும் செல்வகுமார் என்பவரும் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் கடந்த 17-ந் தேதி தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். அந்த மோட்டார் சைக்கிளை திடீரென்று காணவில்லை.
மோட்டார் சைக்கிள் திருட்டு
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், பல இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது முகக்கவசம் அணிந்தபடி ஒரு நபர் 17-ந் தேதி அதிகாலையில் போலீஸ் குடியிருப்புக்குள் புகுந்து நடந்து செல்வதும், பின்னர் அந்த நபர் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமாரின் மோட்டார் சைக்கிளை திருடிச்செல்லும் காட்சியும் பதிவாகி இருந்தது.
போலீசார் விசாரணை
ஆனால் அந்த நபர் யார்? போலீஸ் பாதுகாப்பு அதிகமாக இருக்கும் குடியிருப்புக்குள் அந்த ஆசாமி எப்படி நுழைந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அத்துடன் அந்த நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
போலீஸ் பாதுகாப்பு அதிகமாக இருக்கும் போலீஸ் பயிற்சி பள்ளி வளாக குடியிருப்பிலேயே மர்ம ஆசாமி புகுந்து சப்-இன்ஸ்பெக்டரின் மோட்டார் சைக்கிளை திருடிச்சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.