தேனி அல்லிநகரம் சின்னக்குளம் கண்மாயில் தூய்மை பணி
தேனி அல்லிநகரத்தில் சின்னக்குளம் கண்மாயில் தூய்மை பணி நடந்தது
தேனி அல்லிநகரம் நகராட்சி நிர்வாகம் சார்பில், அல்லிநகரம் சின்னக்குளம் கண்மாயில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் கீழ் தூய்மை பணி மற்றும் மரக்கன்றுகள் நடும் பணி நடந்தது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் முரளிதரன் தொடங்கி வைத்து, தூய்மை பணியில் ஈடுபட்டார். மேலும் கண்மாய் கரையில் மரக்கன்று நடவு செய்து நகராட்சி பகுதிகளில் குப்பைகள் சேகரிப்பதற்கான 4 புதிய வாகனங்களை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் ரேணுப்பிரியா, துணைத்தலைவர் செல்வம், நகர்மன்ற ஆணையாளர் வீரமுத்துக்குமார், சுகாதார அலுவலர் அறிவுச்செல்வம் மற்றும் கவுன்சிலர்கள், நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் கலந்துகொண்டனர். இந்த தூய்மை பணியில் தேனி மாவட்ட தன்னார்வலர் குழுவினர், நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் இளைஞர் அணி, அல்லிநகரம் நீர்வள பாதுகாப்பு சங்க, இந்து எழுச்சி முன்னணி நிர்வாகிகள், பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டு தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
கண்மாய் கரையிலும், கண்மாய்க்குள்ளும் கிடந்த பிளாஸ்டிக் குப்பைகள், பாட்டில்கள் போன்றவற்றை அகற்றி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். முன்னதாக கலெக்டர் தலைமையில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் தொடர்பான உறுதிமொழி ஏற்கப்பட்டது.