தேனி கலெக்டர் அலுவலகத்தில் வீட்டுமனை பட்டா கேட்டு மக்கள் மனு


தேனி கலெக்டர் அலுவலகத்தில்  வீட்டுமனை பட்டா கேட்டு மக்கள் மனு
x

தேனி கலெக்டர் அலுவலகத்தில் குமணன்தொழு ஊராட்சியை சேர்ந்த மக்கள் வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுத்தனர்.

தேனி

பட்டா கேட்டு மனு

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார். கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில் மனு கொடுக்க ஆண்டிப்பட்டி தாலுகா குமணன்தொழு ஊராட்சிக்கு உட்பட்ட சிதம்பரவிளக்கு கிராமத்தை சேர்ந்த மக்கள் வந்தனர். அவர்களில் 40 பேர் தனித்தனியாக கலெக்டர் முரளிதரனிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

கோரிக்கைகள்

சிதம்பரவிளக்கு கிராமத்தில் வீடு கட்டி குடியிருந்து வரும் மக்கள், வீட்டுவரி மற்றும் மின்சார கட்டணம் செலுத்தி வரும் நிலையில் அவர்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கப்படவில்லை. தங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தனர்.

இதேபோல் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க உத்தமபாளையம் பகுதி தலைவர் ஜெகதீஸ்வரன், சர்வதேச உரிமைகள் கழக மாவட்ட துணைச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, அனைத்து பிரமலைக்கள்ளர் கூட்டமைப்பு மகளிரணி தலைவி விஜயலட்சுமி, ஜெய்பீம் புரட்சிப் புலிகள் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் தமிழ்ப்புலிகள் கட்சியினர் தங்கள் கோரிக்கைகள் குறித்து மனு கொடுத்தனா்.


Next Story