தேனி தொழிலாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு உபகரணங்கள் கேட்டு ஊழியர்களிடம் தொழிலாளர்கள் வாக்குவாதம்


தேனி தொழிலாளர் அலுவலகத்தில்  பாதுகாப்பு உபகரணங்கள் கேட்டு ஊழியர்களிடம் தொழிலாளர்கள் வாக்குவாதம்
x

தேனி தொழிலாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு உபகரணங்கள் கேட்டு ஊழியர்களிடம் தொழிலாளா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தேனி

பாதுகாப்பு உபகரணங்கள்

தேனி மாவட்டத்தில் கட்டுமான தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் பணிக்கான தொடக்க நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கடந்த 24-ந்தேதி நடந்தது. அதன்பிறகு கருவேல்நாயக்கன்பட்டியில் உள்ள தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இன்று காலையில் 100-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் வாங்குவதற்காக அங்கு வந்தனர். ஆனால் அவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் அலுவலகத்துக்கு வெளியே காத்திருந்தனர். பிற்பகல் 1 மணியளவில் பாதுகாப்பு உபகரணங்களை வழங்கக்கோரி அங்கிருந்த அலுவலர்களிடம் தொழிலாளர்கள் முறையிட்டனர்.

வாக்குவாதம்

குறைவான எண்ணிக்கையில் தான் உபகரணங்கள் வந்துள்ளதாகவும், முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட்டு வருவதாகவும் அங்கிருந்த ஊழியர்கள் தெரிவித்தனர். இதனால் அவர்களிடம் தொழிலாளர்கள் சிலர் வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து அலுவலக கதவு இழுத்து மூடப்பட்டது. உபகரணங்கள் கேட்டு வந்த தொழிலாளர்கள் விரக்தியுடன் வெளியே காத்திருந்தனர். பின்னர் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

இதுகுறித்து தொழிலாளர் நல வாரிய அலுவலர் ஒருவரிடம் கேட்டபோது, "மாவட்டத்தில் நல வாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்கள் 1 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளனர். ஆனால் குறைவான எண்ணிக்கையில் தான் பாதுகாப்பு உபகரணங்கள் வந்துள்ளன.

அவற்றை தனித்தனியாக பைகளில் பிரித்து வைக்கும் பணி நடந்து வருகிறது. முன்னுரிமை அடிப்படையில் பயனாளிகளை அழைத்து கொடுத்து வந்தோம். தகவல் தெரிந்ததும் தொழிலாளர்கள் பலர் வந்துள்ளனர். 2 நாட்களாக மக்கள் அதிகம் பேர் வருகின்றனர். சமாளிக்க முடியாத அளவுக்கு கூட்டம் வருவதால் அலுவலகத்தை உள்பக்கமாக பூட்டும் நிலைமை ஏற்பட்டது" என்றார்.


Next Story