ஆட்டை தூக்கி சென்ற சிறுத்தை


ஆட்டை தூக்கி சென்ற சிறுத்தை
x
தினத்தந்தி 11 July 2023 9:47 PM IST (Updated: 12 July 2023 5:02 PM IST)
t-max-icont-min-icon

ஊதியூர் மலையடிவார பகுதியில் உள்ள தோட்டத்தில் மீண்டும் பட்டியில் இருந்த ஆட்டை சிறுத்தை தூக்கி சென்றது. தொடரும் வேட்டையால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

திருப்பூர்

இதுபற்றி கூறப்படுவதாவது:-

சிறுத்தை

திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள ஊதியூர் வனப்பகுதிக்கு கடந்த சில மாதத்திற்கு முன்பு வந்த ஒரு சிறுத்தை பதுங்கி மலையடிவாரப்பகுதியில் உள்ள தோட்டங்களுக்கு புகுந்து அங்கிருந்த ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடி வருகிறது. இதையடுத்து காங்கயம் வனத்துறையினர் ஊதியூர் மலை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக எச்சரிக்கை பதாகைகள் பல்வேறு இடங்களில் வைத்து சிறுத்தையை கண்காணித்து வந்தனர். ஆனால் சிறுத்தை கூண்டுகளில் சிக்காமல் இதுவரை வனத்துறையினருக்கு போக்கு காட்டி வருகிறது. இந்தநிலையில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் சிறுத்தையை பார்த்ததாக தகவல் தெரிவித்து வருகின்றனர். தகவல் தெரிவித்த இடங்களுக்கு சென்ற வனத்துறையினர் சிறுத்தையின் கால் தடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக மலையடிவார பகுதியில் ஆடுகள் மாயமாகி வந்தது. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு ஊதியூர் காசிலிங்கம்பாளையம் பகுதியில் உள்ள குப்புதுரை என்பவரது தோட்டத்தில் உள்ள ஆட்டுப்பட்டியில் ஒரு வெள்ளாட்டுக்குட்டியை சிறுத்தை தூக்கி சென்றது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு அதே தோட்டத்தில் புகுந்த சிறுத்தை ஆடுகளை தூக்கி செல்லாமல், ஆடுகளுக்கு காவலாய் ஆட்டுப்பட்டி அருகே இரும்பு சங்கிலிகளால் கட்டி வைக்கப்பட்டிருந்த நாயை அலேக்காக கவ்விச்சென்றது.

ஆட்டை தூக்கிச்சென்றது

இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு ஊதியூர், தாயம்பாளையம் பகுதியில் முத்துசாமி என்பவர் தோட்டத்தில் ஆட்டுப்பட்டியில் இருந்து ஒரு ஆட்டை தூக்கி சென்றது. இதையடுத்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

வனத்துறையினர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு சிறுத்தையின் வேட்டையை உறுதி செய்தனர். சிறுத்தையின் தொடர் வேட்டையால் ஊதியூர் பகுதி விவசாயிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.


Next Story