மகளிர் உரிமைத்தொகை கிடைக்காத பெண்கள் குவிந்ததால் பரபரப்பு
திருப்பத்தூர் தாலுகா அலுவலகத்தில் மகளிர் உரிமைத்தொகை கிடைக்காத பெண்கள் ஏராளமானோர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தாலுகா அலுவலகத்தில் குவிந்த பெண்கள்
தமிழகம் முழுவதும் கடந்த 15-ந் தேதி மகளிர் உரிமைத்தொகை வழங்கும் பணி தொடங்கியது. இதன்மூலம் சுமார் 1 கோடி பெண்கள் பயன் அடைந்துள்ளனர். இதில் உரிமைத்தொகை கிடைக்கப்பெறாத பெண்கள் அந்தந்த தாலுகா அலுவலகம், சப்-கலெக்டர் அலுவலகங்களில் உள்ள உதவி மையங்களில் தங்களின் சந்தேகங்களை தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி நேற்று காலை திருப்பத்தூர் தாலுகா அலுவலத்தில் உள்ள உதவி மையத்திற்கு ஒரே நேரத்தில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் குவிந்து தங்களுக்கு உதவித்தொகை வரவில்லை என அங்கிருந்த பணியாளர்களிடம் கேள்வி எழுப்பினர். மேலும் ஒரே நேரத்தில் தமிழகம் முழுவதும் இப்பணிகள் தொடங்கியதால் சர்வர் முடங்கியது. இதனால் அவர்களுக்கு உரிய விளக்கத்தை அதிகாரிகளால் வழங்க முடியவில்லை.
பரபரப்பு
அப்போது தாசில்தார் சிவபிரகாசம் பெண்களிடம் கூறுகையில், உரிமைத்தொகை வராத பெண்களுக்கு அதற்கான காரணம் குறித்து உங்களது செல்போனுக்கு தகவல் வரும். அவர்களுக்கு மட்டுமே அதற்கான காரணத்தை கூறமுடியும். தற்போது சர்வர் வேலை செய்யவில்லை. இதனால் யாரும் எதுவும் செய்யமுடியாது எனவே குறுந்தகவல் வந்தவர்கள் மட்டுமே இங்கு வந்து காரணத்தை தெரிந்து கொள்ளலாம்.
கிடைக்க பெறாத பெண்கள் உதவித்தொகை பெற இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம் என கூறினார். இதனால் தாலுகா அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்திலும் ஏராளமான பெண்கள் குவிந்தனர்.