சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்துவது அவசியம்


சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்துவது அவசியம்
x
தினத்தந்தி 23 July 2023 1:00 AM IST (Updated: 23 July 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon

சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்துவது அவசியம்

கோயம்புத்தூர்

கோவை

சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்துவதுடன், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று கோவையில் நடைபெற்ற எஸ்.20 மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

ஈஷா மையத்தில் மாநாடு

'ஜி 20' உச்சி மாநாட்டின் ஒரு பகுதியான அறிவியல் மாநாடு 'எஸ் 20' என்ற தலைப்பில் கோவை ஈஷா யோகா மைய வளாகத்தில் கடந்த இரண்டு நாட்களாக நடந்தது. இதில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த வல்லுனர்கள் கலந்துகொண்டனர்.

மாநாடு நிறைவடைந்ததை தொடர்ந்து 'எஸ் 20' நிகழ்வின் துணை தலைவரும், பேராசிரியருமான அசுதோஷ் ஷர்மா, ஜி 20 மாநாடு இணை செயலாளர் நாகராஜ் கக்கனூர் நாயுடு ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற தலைப்பில் நடத்தப்பட்ட இந்த சர்வதேச மாநாடு நிகழ்ச்சியில் ஜி 20 நாடுகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட வல்லுனர்கள் பங்கேற்றனர். உலகஅளவில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பேரழிவுகளை எதிர்கொள்ளவும், தவிர்க்கவும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

எதிர்வரும் காலங்களில் கொரோனா போன்ற பெருந்தொற்று பரவாமல் தடுத்தல், எதிர்கொள்ளுதல் உள்ளிட்டவை குறித்து வல்லுனர்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

மின்சேமிப்பு கட்டமைப்பு

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாதவகையில், சூரியஒளி, காற்றாலை உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித்துறைக்கு உலகளவில் அதிக முக்கியத்துவம் அளித்து செயல்பட வலியுறுத்தப்பட்டது. குறிப்பாக சூரியஒளி ஆற்றல் உற்பத்தித்துறையில் பகலில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை சேமித்து வைக்க போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் உடனுக்குடன் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மின்சேமிப்பு கட்டமைப்பை வலுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

எதிர்வரும் காலங்களில் மக்களின் அன்றாட வாழ்வின் அனைத்து செயல்களிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மிக முக்கிய பங்கு வகிக்க உள்ளது. இத்தகைய அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் போல், பல தீமைகளும் உள்ளன. எனவே இத்தகைய தொழில்நுட்பத்தை நல்ல முறையில் பயன்படுத்தி மக்கள் நலன் காக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

கலந்துரையாடல்

வழக்கமாக இதுபோன்ற மாநாடு பல்வேறு நாடுகளில் ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் நடத்தப்படுவது வழக்கம். இந்த முறை முற்றிலும் புதுமையாக மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில்சூழ்ந்த ஈஷா வளாகத்தில் நடத்தப்பட்டுள்ளது.

பங்கேற்பாளர்களுக்கு இது மிகுந்த மகிழ்ச்சியையும், புத்துணர்வையும் அளித்துள்ளது. சத்குரு ஜக்கி வாசுதேவுடன் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியும் பங்கேற்றவர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. ஆன்மிகம், அறிவியல் இரண்டும் மக்கள் நலனை தான் அடிப்படையாக கொண்டுள்ளன.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

ஜி 20 செயலாளர் நமன் உபாத்யாய், மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை தலைமை இயக்குநர் ஆர்கே. ஷர்மா உள்பட பலர் உடனிருந்தனர்.



Next Story