மெட்ரோ ரெயில் பணியின்போது சேதமடையாமல் பாதுகாக்க காந்தி மண்டபத்துக்கு காந்தி சிலையை தற்காலிகமாக மாற்ற திட்டம்


மெட்ரோ ரெயில் பணியின்போது சேதமடையாமல் பாதுகாக்க காந்தி மண்டபத்துக்கு காந்தி சிலையை தற்காலிகமாக மாற்ற திட்டம்
x

மெட்ரோ ரெயில் பணியின்போது சேதமடையாமல் இருப்பதற்காக சென்னையின் அடையாளமாக திகழும் காந்தி சிலையை அடையாறில் உள்ள காந்தி மண்டபத்துக்கு தற்காலிகமாக கொண்டு செல்ல அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

சென்னை,

சென்னை பூந்தமல்லி-கலங்கரை விளக்கம் இடையே 26.1 கிலோ மீட்டர் தூரத்துக்கு 4-வது வழித்தடத்தில் புதிய மெட்ரோ ெரயில் பாதை அமைக்கும் பணியில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இதில், மெரினா கடற்கரையில் காந்தி சிலை அருகே கலங்கரை விளக்கம் ரெயில் நிலையம் சுமார் 70 அடி ஆழத்தில் சுரங்க ரெயில் நிலையமாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெறும்போது, காந்தி சிலை சேதமடைவதை தவிர்க்க முன்னெச்சரிக்கையாக சிலையை வேறு இடத்துக்கு மாற்ற கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுகுறித்து ஆய்வு செய்து அனுமதியளிக்க அரசு சார்பில் சென்னை மாநகராட்சிக்கு அறிவுறுத்தப்பட்டது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், பொதுப்பணித்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

2025-ம் ஆண்டு ரெயில் ஓடும்

சென்னையில் மெட்ரோ ரெயில் சேவைக்காக நடந்து வரும் 3 வழிப்பாதைக்கான பணிகளில் முதல் கட்டமாக பூந்தமல்லியில் இருந்து கலங்கரை விளக்கம் வரை நடந்து வரும் பணியில் பூந்தமல்லியில் இருந்து கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் வரையிலான பணிகள் வருகிற 2025-ம் ஆண்டு ஜூன் மாதம் நிறைவடைந்து ரெயில்கள் ஓட்ட திட்டமிடப்பட்டு உள்ளது. அடுத்த 6 மாதத்தில் கலங்கரை விளக்கம் வரையில் ரெயில்கள் ஓட்டப்படும். இதற்கான பணிகள் தற்போது வேகமாக நடந்து வருகிறது.

குறிப்பாக கலங்கரை விளக்கம்அருகில் மெரினா கடற்கரையில் மெட்ரோ ரெயில் நிலையம் சுமார் 70 அடி ஆழத்தில் சுரங்கத்தில் அமைய உள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணியின்போது சென்னைக்கு அடையாளமாக உள்ள காந்தி சிலையை பாதுகாப்பாக அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்திவிட்டு மெட்ரோ ரெயில் பணிகள் முடிவடைந்ததும், மாநகராட்சி தலைமை அலுவலகம் உள்ள ரிப்பன் மாளிகை எதிரில் அமைத்து கொடுத்தது போன்று பூங்காவுடன் காந்தி சிலை மீண்டும் பழைய இடத்திலேயே பார்வையாளர்களை கவரும் வகையில் நிறுவப்படும்.

காந்தி மண்டபத்தில் காந்தி சிலை

காந்தி சிலையை அப்புறப்படுத்துவதற்காக தலைமைச்செயலாளர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. காந்தி சிலையை தற்காலிகமாக இடமாற்றம் செய்ய சென்னை மாநகராட்சி தடையில்லா சான்றிதழ் வழங்கியுள்ளது. பாதுகாப்பான இடத்தை பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறைகள் தேடி வந்தன. ரிப்பன் மாளிகை, மெரினா கடற்கரையில் உள்ள சர்வீஸ் ரோடு பகுதியில் ஒரு இடம், பொதுப்பணித்துறை வளாகம் உள்ளிட்ட பல இடங்களை தேர்வு செய்தனர். இதற்கிடையில் அடையாறில் உள்ள காந்தி மண்டபத்தில் காந்தி சிலையை பாதுகாப்பாக வைக்க உயர் அதிகாரிகள் ஆலோசனை வழங்கி உள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 2-ந்தேதி காந்தி ஜெயந்தி சிலைக்கு கீழே காந்தியின் உருவப்படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும். அதில் கவர்னர், முதல்-அமைச்சர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மரியாதை செலுத்துவார்கள். வருகிற 2-ந்தேதி காந்தி ஜெயந்தி வர இருப்பதால், ஒரு வாரத்துக்குள் காந்தி மண்டபத்துக்கு காந்தி சிலையை கொண்டு செல்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் எந்த முடிவும் இறுதி செய்யப்படவில்லை.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.


Next Story