பூம்புகார் அருகே கடல் அரிப்பால் கிராமத்துக்குள் தண்ணீர் புகும் அபாயம்


பூம்புகார் அருகே கடல் அரிப்பால் கிராமத்துக்குள் தண்ணீர் புகும் அபாயம் உள்ளதால் புதுகுப்பம் கடற்கரையில் கருங்கல் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி தொடங்கப்படுமா? என மீனவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

மயிலாடுதுறை

திருவெண்காடு:

பூம்புகார் அருகே கடல் அரிப்பால் கிராமத்துக்குள் தண்ணீர் புகும் அபாயம் உள்ளதால் புதுகுப்பம் கடற்கரையில் கருங்கல் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி தொடங்கப்படுமா? என மீனவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

22 மீனவ கிராமங்கள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் 22 கடலோர மீனவ கிராமங்கள் உள்ளன. தமிழ்நாட்டிலேயே அதிக கடற்கரைபரப்பை கொண்ட மாவட்டமாக நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்கள் திகழ்கின்றன. மயிலாடுதுறை மாவட்டத்தில் சுமார் ஒரு லட்சம் மீனவர்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் 90 சதவீதம் பேர் மீன்பிடி தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.

மாவட்டத்தில் பழையார், பூம்புகார் ஆகிய இடங்களில் மீன்பிடி துறைமுகங்கள் உள்ளது. தற்போது தரங்கம்பாடியில் புதிதாக மீன்பிடி துறைமுகம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது.

புதுகுப்பத்தில் கடல் அரிப்பு

இந்த நிலையில் பூம்புகார் அருகே குப்பம் கடற்கரையில் பருவ நிலை மாற்றத்தின் காரணமாக கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கடல் அரிப்பு கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. இதனால் கிராமங்களுக்குள் தண்ணீர் புகும் அபாயம் உள்ளது.

இதன் காரணமாக கடலோர மீனவ கிராம மக்கள் தங்கள் பகுதியில் இருந்து வெளியேற வேண்டிய நிலை உள்ளது. மேலும் கடல் அரிப்பு ஏற்படுவதால் மீனவர்கள் தங்கள் படகுகளை கடலுக்கு கொண்டு செல்வதில் சிரமம் அடைகின்றனர்.

சுனாமியின் போது அதிக உயிர் பலி ஏற்பட்டது

மாவட்டத்தில் பூம்புகார், திருமுல்லைவாசல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கடல் அரிப்பை தடுக்க கருங்கல் தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. புதுகுப்பம் மீனவ கிராமத்தில் ஏற்பட்ட கடல் அரிப்பு காரணமாக 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் போது கிராமத்துக்குள் தண்ணீர் புகுந்து அதிக அளவில் உயிர்பலி ஏற்பட்டது.

கடல் அரிப்பு அதிகரித்து வீடுகள் சேதம் அடைந்ததால், கடற்கரையில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் மீனவர்களுக்கு சுனாமி வீடுகள் கட்டித் தரப்பட்டன. ஆனால் தொடர்ந்து கடல் அரிப்பு ஏற்பட்டு வருவதால் தங்களுடைய படகுகளை கரையில் நிறுத்தவும், கடலுக்கு கொண்டு செல்லவும் மிகுந்த சிரமம் ஏற்படுவதாக அந்த பகுதி மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

கிராமத்துக்குள் தண்ணீர் புகும் அபாயம்

இதுகுறித்து புதுகுப்பம் கிராம பஞ்சாயத்தார்கள் கூறுகையில், எங்கள் கிராமத்தில் 400 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் 100 பைபர் படகுகள் மற்றும் கட்டு மரங்கள் உள்ளன. சிறு மீன்பிடி தொழில் செய்யும் கிராமமாக எங்கள் பகுதி விளங்குகிறது.

கடந்த 10 ஆண்டுகளில் கடல் அரிப்பு அதிக அளவில் உள்ளதால் கிராமத்துக்குள் கடல் நீர் புகும் அபாயம் உள்ளது. கடல் அரிப்பால் கடற்கரையில் படகுகளை நிறுத்த முடியாமல் தவித்து வருகிறோம். இதனால் அருகே உள்ள வாய்க்காலில் பைபர் படகுகளை நிறுத்தி வைத்துள்ளோம்.

முதல்-அமைச்சரிடம் மனு

கோடைக்காலத்தில் அந்த வாய்க்கால் வறண்டு விடுவதால், பைபர் படகுகளை கரையில் நிறுத்தி வைத்து விட்டு மீன்பிடிக்க செல்லும் போது கடலுக்கு தூக்கி செல்லும் நிலை உள்ளது.

கடல் அரிப்பை தடுக்க கருங்கல் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என கடந்த ஆண்டு புதுகுப்பம் வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை மனு அளித்தோம். எங்களின் கோரிக்கைகயை ஏற்று புதுகுப்பம் கடற்கரையில் கருங்கல் தடுப்புச்சுவர் அமைக்க ரூ.9 கோடி நிதி ஒதுக்கீடு தமிழக அரசு அறிவித்துள்ளது.

கருங்கல் தடுப்புச்சுவர்

இந்த திட்டத்தை விரைவுபடுத்தி கருங்கல் தடுப்புச்சுவர் அமைக்கும் பணியை உடனடியாக தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மீனவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. எங்கள் கிராமத்தின் கோரிக்கையை ஏற்று கருங்கல் தடுப்புச்சுவர் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், , பரிந்துரை செய்த நிவேதா முருகன் எம்.எல்.ஏ.வுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என்றனர்.


Next Story