வனத்துறை உயர் அதிகாரிகள் ரூ.2½ கோடி லஞ்சம் வாங்கியதாக பரபரப்பு குற்றச்சாட்டு
பேரம் பேசும் வீடியோ விவகாரம் குறித்த வழக்கு விசாரணையின்போது, வனத்துறை உயர் அதிகாரிகள் ரூ.2½ கோடி லஞ்சம் பெற்று இருப்பதாக மதுரை ஐகோர்ட்டில் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது.
மதுரை,
நாகர்கோவில் வடசேரியில் அரசு ரப்பர் கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஒரு நிர்வாக இயக்குனர், பொது மேலாளர் ஆகிய பதவிகளில் வனத்துறையின் ஐ.எப்.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டு செயல்படுகின்றனர். ரப்பர் தோட்ட தொழிலாளர்களால்தான் ரப்பர் கழகம் செயல்படுகிறது.
ஆனால் இந்த கழகம், தொழிலாளர்களின் நலனில் அக்கறை செலுத்துவதே இல்லை. அதிகாரிகள் ரப்பர் மரங்களை வெட்டி காண்டிராக்டர்களுடன் சேர்ந்து முறைகேடுகளில் ஈடுபடுவது தொடர்கதையாக உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட ஒகி புயலில் சேதம் அடைந்த ரப்பர் மரங்களை காண்டிராக்டர்களுடன் சேர்ந்து அதிகாரிகள் முறைகேடாக வெட்டினர்.
ரத்து செய்யுங்கள்
அதே போல சமீபத்தில் ரப்பர் மரங்கள் ஏலம் விடுவது சம்பந்தமாக அறிவிப்பு வெளியானது. இந்த ஏலத்தில் பங்கேற்ற காண்டிராக்டர்களுடன் அதிகாரிகள் பேரம் பேசுவது வீடியோவில் பதிவாகி உள்ளது. இது சட்டவிரோதம். இதுபோன்ற அதிகாரிகளின் நடவடிக்கைகளால் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு உள்ளது.
எனவே ரப்பர் மரங்கள் ஏல அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். விதிகளை பின்பற்றி முறையாக மறு ஏலம் நடத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
விளக்கம் கேட்க உத்தரவு
இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் வக்கீல் சி.டி.பெருமாள் ஆஜராகி, ஒவ்வொரு மரத்திற்கும் குறிப்பிட்ட தொகை கமிஷனாக தர வேண்டும் என காண்டிராக்டர்களிடம், ஐ.எப்.எஸ். அதிகாரிகள் கேட்பது, வீடியோவில் வெளியாகியுள்ளது. ரூ.5 கோடி ஏல தொகையில் பாதியை (ரூ.2½ கோடி) லஞ்சமாக அதிகாரிகள் பெற்றுள்ளனர். உயர்ந்த பதவிகளில் இருக்கும் இந்த அதிகாரிகளின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என்றார்.
இதையடுத்து இந்த குற்றச்சாட்டுகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு தெரிவிக்கும்படி அரசு வக்கீலுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 30-ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர்.