கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்றவறால் பரபரப்பு


கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில்  தீக்குளிக்க முயன்றவறால் பரபரப்பு
x

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. அப்போது மனு அளிக்க வந்த ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர்

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 265 மனுக்கள் பெறப்பட்டன. இதில் மாற்றுத்திறனாளிகளிடம் 51 மனுக்கள் பெறப்பட்டன. பின்னர் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தீக்குளிக்க முயற்சி

குளித்தலை அருகே உள்ள சிவாயம் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகரன் (45). இவர் நேற்று காலை கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நின்று கொண்டு இருந்தார். அப்போது தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதைக்கண்ட போலீசார் ஓடி சென்று அவரை தடுத்து நிறுத்தி தண்ணீரை ஊற்றி அசுவாசப்படுத்தினர். இதையடுத்து போலீசார் அவரிடம் விசாரித்தபோது, திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனி ஒன்றில் வேலை செய்கிறேன். எனக்கு தேசியமங்கலம் பகுதியில் 10 சென்ட் நிலம் உள்ளது. கடந்த 2004-ம் ஆண்டு அப்பகுதியைச் சேர்ந்த 4 பேர் அந்த நிலத்தை பட்டா போட்டு கொண்டனர். எனவே அந்த நிலத்தை மீட்டு தரக்கூறி வட்டாட்சியர் மற்றும் கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இந்நிலையில் அந்த நிலத்தை 4 பேரும் சேர்ந்து வேறு ஒருவருக்கு விற்று விட்டனர். தற்போது நிலத்தை வாங்கியவர்கள் அந்த இடத்தில் கட்டிடம் கட்டி வருகின்றனர். எனவே எனது நிலத்தை மீட்டு தர வேண்டும் என்றார். இதையடுத்து போலீசார் அவரை அங்கிருந்து அழைத்து சென்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

எமதர்மன் வேடமணிந்து மனு

மண்மங்கலம் தாலுகா, கடம்பன்குறிச்சி கிராமத்தை சேர்ந்த பொன் முத்துக்குமார் என்பவர் எமதர்மன் வேடமணிந்து நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து கலெக்டர் அலுவலகத்திற்குள் செல்ல அனுமதி மறுத்தனர். இதனால் அவரது சார்பில் மற்றொருவர் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- எங்கள் ஊரில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகிறோம்.எங்கள் ஊரில் கோவிலுக்கு அருகாமையில் உள்ள புறம்போக்கு இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து பன்றிகளை வளர்த்து நோய்தொற்று ஏற்படும் வகையிலும், பொதுமக்கள் கடந்து செல்ல இடையூறாகவும், குழந்தைகளுக்கு பாதுகாப்பின்றி அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டு வருகின்றன. எனவே ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களில் உள்ள பன்றிகளையும் மற்றும் அதனை அடைக்கும் பட்டியை அகற்றி, எங்கள் கிராமங்களில் பொதுவழியில் பன்றிகளை வளர்ப்பதற்கு தடை செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


Next Story