கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு
புதுக்கோட்டையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு ஏற்பட்டது.
தீக்குளிக்க முயற்சி
புதுக்கோட்டை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் மெர்சி ரம்யா தலைமை தாங்கினார். கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.
இந்த நிலையில் நார்த்தாமலை பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (வயது 49) மனு கொடுப்பதற்காக வந்திருந்தார். அவர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ளே கூட்டம் நடைபெறும் இடத்தின் அருகே திடீரென தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவரை கலெக்டரிடம் மனு கொடுக்க வைத்தனர்.
பட்டா பதிவு செய்யவில்லை
கடந்த 2006-ம் ஆண்டு தனக்கு கொடுக்கப்பட்ட இலவச வீட்டு மனைப்பட்டாவை தாலுகா அலுவலகத்தில் பதிவு செய்யவில்லை எனவும், இது தொடர்பாக பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும், புதியதாக பட்டா பதிவு செய்து தருவதாக கூறி நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் ஆறுமுகம் கூறினார்.
இதையடுத்து தாசில்தாரை அழைத்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க கலெக்டர் மெர்சி ரம்யா அறிவுறுத்தினார். அதன்பின் அதிகாரிகள் அவரிடம் விசாரித்து கோரிக்கையை கேட்டறிந்து நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.
407 மனுக்கள்
கலெக்டர் அலுவலகத்திற்குள் வருபவர்களை நுழைவு வாயிலில் போலீசார் பலத்த சோதனை செய்து அனுப்புவது உண்டு. போலீசாரின் சோதனையில் சிக்காமல் இருக்க அவர் 2 சிறிய பாட்டிலில் மண்எண்ணெயை ஊற்றி மறைத்து எடுத்து வந்துள்ளார். கலெக்டர் அலுவலகத்தின் உள்ளே சென்று அவர் தன் உடல் மீது ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 407 மனுக்கள் பெறப்பட்டன. அதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க கலெக்டர் மெர்சி ரம்யா அறிவுறுத்தினார். கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் உள்பட பயனாளிகளுக்கு ரூ.83 லட்சத்து 14 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கூட்டத்தில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.