மயிலாடுதுறையில் மறிக்கப்போவதாக வந்த தகவலால் பரபரப்பு


மயிலாடுதுறையில் மறிக்கப்போவதாக வந்த தகவலால் பரபரப்பு
x
தினத்தந்தி 1 Dec 2022 6:45 PM GMT (Updated: 1 Dec 2022 6:46 PM GMT)

காசி தமிழ் சங்கமத்திற்கு செல்லும் ரெயிலை மறிக்கப்போவதாக தகவல் வந்ததால் மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர். இரவு வரை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மயிலாடுதுறை

காசி தமிழ் சங்கமத்திற்கு செல்லும் ரெயிலை மறிக்கப்போவதாக தகவல் வந்ததால் மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர். இரவு வரை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ரெயிலை மறிக்க போவதாக ரகசிய தகவல்

ராமேஸ்வரத்தில் இருந்து வாரணாசி எக்ஸ்பிரஸ் ெரயில் மயிலாடுதுறை வழியாக வியாழக்கிழமைதோறும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழகத்தை சேர்ந்த பலரும் நேற்று புறப்பட்டு சென்றனர்.இந்த நிலையில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி இந்துத்துவா சிந்தனையுடன் நடத்தப்படுவதாக கூறி இந்திய மாணவர் சங்கத்தினர் வாரணாசி ரெயிலை மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் மறித்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

போலீசார் குவிப்பு

இதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ், ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட போலீசார், மயிலாடுதுறைரெயில் நிலையத்தில் அதிகாலை 5 மணிக்கு குவிக்கப்பட்டனர்.ரெயில் நிலைய நுழைவு வாயில் பகுதி, பார்சல் ஆபீஸ் பகுதி, மறையூர் ரெயில்வே கேட் பகுதி, மாப்படுகை ரெயில்வே கேட் பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் ரெயில்வே போலீசார் மற்றும் இருப்பு பாதை போலீசார் ஆகியோரும் ரெயில் நிலைய வளாகத்திற்குள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

இரவு வரை பாதுகாப்பு பணி

ரெயில் பெட்டிகளிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் ரெயில் நிலையம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ரெயில் மயிலாடுதுறையில் இருந்து புறப்பட்டு சென்ற பின்னரும் நேற்று இரவு வரை போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் இரவு வரை எந்தவித போராட்டமும் நடைபெறவில்லை.


Next Story